Skip to main content

சன் பார்மா நிறுவனத்திற்கு ரூபாய் 10 கோடி அபராதம்! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

 

Rs 10 crore fine for Sun Pharma!

 

வேடந்தாங்கல் அருகே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மருந்து ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்ட சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையொட்டி, இயங்கி வரும் சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம், ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி மீனவர் நலச்சங்கத்தின் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 1994- ஆம் ஆண்டு முதல் 2006- ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது சட்டவிரோதம் எனக் கூறி சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
High Court order on Karnataka Chief Minister Siddaramaiah fined

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியின் போது, சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்தக்காரர் உடுப்பி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கும், அந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பாவை கைது செய்யவும், பதவி விலகக் கோரியும் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் போது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீஷித் அமர்வு முன் வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம், ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து, அவர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6 ஆம் தேதியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா 11 ஆம் தேதியும், உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மார்ச் 15 ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

Next Story

வாயுக்கசிவு; ‘காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ - பசுமை தீர்ப்பாயம்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
 Green Tribunal Action will be taken against those responsible for gas leakage

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இரவு நேரத்தில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிமாக மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பான விசாரணை புத்தாண்டை அடுத்து விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கோரமண்டல் நிறுவனத்தில் அமோனியா குளிரூட்டும் கருவி செயலிழந்ததன் காரணமாக தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதி வழங்கப்படும். தொழில்துறை பாதுகாப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அங்குள்ள மக்களிடம் ஏன் எச்சரிக்கை விடுக்கவில்லை?. மேலும், அந்த உர ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அடிக்கடி ஆய்வு ஏன் நடத்தவில்லை?. என்று கேள்வி எழுப்பியது 

இதனை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ‘துறைமுகத்தில் இருந்து நிறுவனத்திற்கு அமோனியா எடுத்துவரும் குழாயில் ஏற்பட்ட அழுத்தத்தால் தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்று விளக்கம் அளித்துள்ளது.