Skip to main content

"என் மகனைக் காப்பாற்றுங்கள்!" - ரவுடியின் தாயார் மனு!

 

Rowdy's mother petitions the Human Rights Commission

 

காஞ்சிபுரத்தையே கதிகலக்கிவந்தவர் பிரபல தாதா ஸ்ரீதர் தனபால். காஞ்சிபுரத்தை அடுத்த திருபருத்திகுன்றத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர், 1990ஆம் ஆண்டு மிகச் சாதாரணமாக சுற்றிவந்தவர். அவரின் மாமாவுடன் பஜனை குழுவில் உதவியாக இருந்து வந்த ஸ்ரீதரின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் வேறுவேலை பார்த்துக்கொள் என அனுப்பிவிட்டார் அவரது மாமா. 


அதன் பின்னர் வேறுவழியில்லாத ஸ்ரீதர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாராய சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் சேர்ந்தார். நாளடைவில் சக்கரவர்த்திக்கு நம்பிக்கைக்கு உரியவராகி, பின்னர் அவரின் மகளை திருமணம் செய்துகொண்டார். சக்கரவர்த்திக்கு வயதானதால், ஸ்ரீதர் வியாபாரம் முழுவதும் பார்த்துக்கொண்டார். சாராய வியாபாரப் போட்டியால், பெண் சாராய வியாபாரியைக் கொலை செய்தார். பின்னர் உயர் காவல்துறை அதிகாரி தொடர்பால் ஸ்ரீதரின் சாராய சாம்ராஜ்யம் விரிவடைந்தது. பின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கும் தமிழகத்தில் சில மாவட்டத்திற்கும் லாரி டாங்கரில் சாராயக் கடத்தல் நடந்தது. 
 

காவல்துறை வட்டாரத்தை, தன் நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொலை செய்தார். பின்னர், 2005க்கு மேல் ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடிக்கவே, அதிலும் இறங்கி, நினைக்கும் இடத்தை குறைந்த விலைக்கு எழுதி வாங்கும் செயலில் ஈடுபட்டார். அப்படி எழுதித் தராவிட்டால் கொலை சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஸ்ரீதரின் ஒரு ஃபோன் கால் வந்தாலே காஞ்சிபுரம் பகுதியின் தொழில் அதிபர்கள் நடுங்குவார்கள்.

 

ஸ்ரீதருக்கு வலது கரமான டிரைவர் தினேஷ், மற்றும் அவரது கூட்டாளிகள் அவர் சொல்வதை நிறைவேற்றி வந்தனர். சிறையில் இருந்தபடியே கட்டப்பஞ்சாயித்து, ஆட்கடத்தல், பணம் பறிப்பு, கொலை என அரங்கேற்றி வந்த ஸ்ரீதர், கடந்த 2013க்கு பின் சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவானார். பின்னர் வெளிநாடுகளில் இருந்தபடி இதே வேலையில் ஈடுபட்டுவந்தார். இந்தநிலையில், காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி.யாக ஸ்ரீநாதா பதவியேற்ற பின், ஸ்ரீதர் வழக்கு சேலஞ்சாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெரும் வியாபாரிகளும் உதவி செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதரின் நடமாட்டத்தைக் கண்காணித்த ஏ.எஸ்.பி ஸ்ரீநாதா, ஸ்ரீதருக்கு வலது கையாக இருப்பவர்களைத் துரத்தித் துரத்திக் கைதுசெய்து மீண்டும், மீண்டும் சிறையில் அடைத்தார். இதனால் வெளிநாட்டில் இருந்த ஸ்ரீதருக்கு பணம் தடைப்பட்டது. ஒரு கட்டத்தில் காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் விஸ்னு மற்றும் ஏ.எஸ்.பி ஸ்ரீநாதாவை ஃபோனில் மிரட்டினார். 

 

இதனால் வேகமெடுத்த வழக்கால், ஸ்ரீதரின் வங்கி மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டது. பின்னன்  ஸ்ரீதரின் மனைவி கைது செய்யப்பட்டார். இதனால் செய்வதறியாமல் நிராயுதபாணியாக நின்ற ஸ்ரீதர், தான் பதுங்கியிருந்த கம்போடியா நாட்டில் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது. பின்னர் ஸ்ரீதரின் உடல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரத்தில் இறுதிச் சடங்கும் செய்யப்பட்டது. ஸ்ரீதரின் மறைவுக்குப் பின் நிம்மதி மூச்சு விட்ட காஞ்சிபுரம் தொழில் அதிபர்கள், ஏ.எஸ்.பி ஸ்ரீநாதாவுக்கு நன்றியையும் தெரிவித்தனர். 

 

ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை காஞ்சிபுரத்தில் மீண்டும் கொடூர கொலைகள் அரங்கேறின. தாதா ஸ்ரீதரின் இடத்தை அடைய மீண்டும் பல தலைகள் உருண்டன, கேங் வார் உண்டானது. இதனால் காஞ்சி மக்கள் பீதியில் மூழ்கினர். மீண்டும் காவல்துறை களத்தில் இறங்கி, ஸ்ரீதரின் விஸ்வாசிகளான பொய்யாகுளம் தியாகு, தணிகா, தினேஷ் மேலும் கூட்டாளிகள் சிலரை தேடிப்பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், இந்த முறை இந்த கேங் வார் வேறு திசையை நோக்கிச் சென்றது. தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் லிஸ்டை தயார் செய்தது காவல்துறை. அதில், சிலரை என்கவுண்டர் லிஸ்டிலும் சேர்த்துள்ளனர்.

 

மாவட்ட வாரியாக ரவுடிகளைக் கண்காணிக்கவும் அவர்களை ஒடுக்கவும் உளவுத்துறை மூலமும் டி.ஜி.பி. திரிபாதிக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ரவுடிகளிடம் பணம் பறிக்கும் தனிப்படை போலீசார் தாதா ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷை என்கவுண்டர் செய்ய எதிர் கோஷ்டியிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தினேஷ் தற்போது ஜாமீனில் வெளியேவந்து திருந்தி தன் குடும்பத்தாருடன் சென்னையில் வாழ்ந்துவருவதாகவும், தினேஷின் தாயார் மீரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதனால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் தனிப்படை போலீசார் துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.