'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்' என்று 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
வெளியான வீடியோவில், ''தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாரும் கூட்டணி ஆட்சியில் குரலை உயர்த்தினார்களோ இல்லையோ 2016-ல் கூட்டணி ஆட்சியில் என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டோம். முன்னாடி இருந்த கட்சிகளெல்லாம் இப்படி பேசினார்களா என்று தெரியவில்லை. கேபினட்டில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர். கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர்.
பவர் ஷேர் என்பது எனக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது. 1999-ல் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் முன்வைத்த முழக்கம் 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' நெய்வேலி அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும் பொழுது எழுப்பிய முழக்கம் 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மக்களுக்கும் அதிகாரம்'' என பேசும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அந்த வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதுசர்ச்சையை ஏற்படுத்த மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் 'எனக்கு தெரியவில்லை என்னுடைய அட்மின் போட்டு இருப்பார்' என தெரிவித்துவிட்டு சென்றார்.
முன்னதாக மது ஒழிப்பு மாநாட்டிற்கு மதுவை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. அதிமுகவினர் கூட அந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என என்று பேசியிருந்தது பேசுபொருளாகி இருந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமா பேசிய வீடியோ நீக்கப்பட்டது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.