ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.
அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.