பல்வேறு படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ரவுடிகளை போலீசார் கைது செய்து வரும் நிலையில் பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி தாக்குதல் நடத்தியது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மயிலாப்பூர் சிவக்குமார் கொலை உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் ரோகித். மதுரை பாலா என்ற ரவுடியுடைய கூட்டாளி என்று கூறப்படுகிறது. ரவுடி ரோகித் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழகத்தில் ரவுடிகள் களை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ரவுடி ரோகித்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சென்னை டி.பி சத்திரத்தில் பதுங்கியிருந்த ரோகித்தை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்றுள்ளனர். அப்பொழுது சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றபொழுது மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கொண்டு தலைமை காவலர் சரவணகுமார் என்பவரை ரவுடி ரோகித் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரவணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்பாக்கியால் காலில் சுட்டு ரோஹித்தை போலீசார் தற்போது பிடித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாலை நேரத்திலேயே ரவுடி ஒருவரை சென்னை போலீசார் தாக்குதல் காரணமாக சுட்டுப்பிடித்த சம்பவம் டிபி சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.