Skip to main content

“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” - முதல்வர்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Right of expression issue in Parliament 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது, தந்தை பெரியாரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அப்போது பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை பெரியாரின் பெயர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை பெரியாரின் பெயரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக் காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி. சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வருடன் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்திப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
World Bank Managing Director meeting with the Prime Minister

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று (23.02.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான தோழி விடுதியை பார்வையிட்டதாக கூறினார். மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு தனது பாராட்டினை தெரிவித்தார். அதோடு இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் வேளாண் கடன் திட்டத்திற்கு 1971 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டிற்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்து பேசினார். 1971 ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது. தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழ்நாட்டுப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இச்சந்திப்பின்போது தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We will make the India coalition win to protect India CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (23.02.2024) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன்.  கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும் திமுகவையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால் அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

We will make the India coalition win to protect India CM MK Stalin

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள், நிதிநிலை அறிவிப்புகள், மத்திய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும். இந்தியாவைக் காக்க‘இந்தியா’வை வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.