கடந்த ஆகஸ்ட் 11- ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் பகுதி பழைய குற்றாலத்திலிருக்கும் ரிசார்ட் ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், அவரின் பாதுகாப்பு அதிகாரியான திருத்தணியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான பார்த்திபன் மற்றும் மேத்யூ (வயது 60) ஆகியோர் தங்கியுள்ளனர். நீதிபதி வேறு ஒரு அறையில் தங்க, அங்குள்ள கெஸ்ட் ஹவுசில் எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனும் மேத்யூவும் தங்கியிருக்கின்றனர். பார்த்திபன் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர்.
நேற்று முன்தினம் (12/08/2022) இரவு எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனும், மேத்யூவும் பேசிக் கொண்டிருந்துவிட்டு பின்பு தூங்கச் சென்றனர். காலையில் மேத்யூ எழுந்தபோது பார்த்திபனைக் காணவில்லை. அந்தப் பகுதி வளாகத்தில் தேடிய மேத்யூ, பின்னர் அறையிலுள்ள பாத்ரூம் கதவைத் திறக்க முயன்றார். அது திறக்கவில்லை. சந்தேகப்பட்ட மேத்யூ பலமாகக் கதவைத் திறந்தபோது அங்கு கைத்துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் இறந்து கிடந்தது கண்டு பதறியவர், விடுதி பொறுப்பாளர் மற்றும் போலீசாருக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.
குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் கைத்துப்பாக்கியால் இடது மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்ததுடன் சத்தம் வெளியே கேட்காமலிருப்பதற்காக கதவைப் பூட்டிக் கொண்டிதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
பின்னர் எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனின் உடலைப் பிரதேப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த எஸ்.பி.கிருஷ்ணராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக எஸ்.எஸ்.ஐ. பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் எஸ்.பி.கிருஷ்ணராஜ்.
தற்கொலை செய்துகொண்ட எஸ்.எஸ்.ஐ. பார்த்திபனுக்கு தீபா (வயது 45) என்ற மனைவியும் யுவராஜ் (வயது 17) என்ற மகன் ஹெசிக்கா (வயது 12) என்ற மகளும் உள்ளனர்.