
சிதம்பரத்தில் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்கறிஞர் வீரமர்த்தினி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் அன்புராஜ், துரை. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் குமரேசன், கடலூர்மாவட்டதலைவர் பூ.சிஇளங்கோவள், மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேசினர். இந்த கூட்டத்தில், மருத்துவ உயர்கல்வியில் இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு மாநில உரிமையை பறிக்கும் செயல். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது சமூக அநீதி என்பதால் அதை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும். வேலைவாய்ப்புகள், இல்லம் தேடி கல்வி, எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி நடைபெறும் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு, நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். இந்த கோயிலில் தீண்டாமை ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண சட்டம் போன்றவற்றிற்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது. தீண்டாமை என்று நந்தனார் நுழைந்த வாயிலை மூடி வைத்துள்ளனர். அதனை திறக்க வேண்டும். பழனி முருகன் கோயிலின் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்கள் நியமனம் செய்ய வேண்டும். திமுக ஆட்சியில்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வர வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இது மிகப்பெரிய புரட்சி. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தது இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுதான். அது இன்னும் பரவலாக வர வேண்டும். இதற்கான இடையூறுகள் இருந்தால் அதை அறநிலையத்துறை களைய செய்ய வேண்டும்.
கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதுபோல் தொழில் வளர்ச்சியிலும் முதல் இடத்தில் உள்ளது. இவை நாடாளுமன்றத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. பேரிடர் நிதியை அறிவிக்கவில்லை. அதற்கான இழப்பீட்டையும் தரவில்லை. மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. இது இல்லாமல் தமிழக அரசு தடுமாறுகிறது. ஆனால் பாஜகவினர், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறுகிறார்கள். தமிழ்நாட்டு அரசுக்கு நிதி ஒதுக்காமல் எப்படி திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. அதிக வரி மாநிலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு அதிக நிதி கொடுக்காமல் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை வாரி வழங்குகிறது. ஏனென்றால் மைனாரிட்டி பாஜக அரசை அந்த மாநில கட்சிகள் ஆதரிக்கின்றன. அதனால் நிதி வாரி வழங்கப்படுகிறது.
அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு பொதுத்துறை நிறுவனங்களை கொடுக்க இருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனமாக இருந்தால் அதில் இட ஒதுக்கீடு இருக்கும். ஆனால் தனியார் துறையில் அந்த இட ஒதுக்கீடு கிடையாது. எனவே தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவில் ஒருமித்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மாநாட்டை நடத்த இருக்கிறோம். பண்பாட்டு படையெடுப்பு ஆபத்து இருக்கிறது. புராணத்தை வரலாறாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தமிழ் பண்பாட்டு, இலக்கிய, பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் அடுத்த மாதம் தமிழ் அறிஞர்களை வைத்து மாநாடு நடத்த இருக்கிறோம்.

கூலிக்கெல்லாம் ஆள் பிடித்து பெரியாரைப் பற்றி பேசவைத்து பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. திராவிட மாடலாட்சி ரேஸ் குதிரையாக ஓடுகிறது. அதனால் ஏதாவது ஒரு பொய்க்கால் குதிரை கிடைக்குமா என பார்க்கிறார்கள். அவருக்கு எந்த பாதுகாப்பு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நாங்கள் நாட்டிற்காகவும், மொழிக்காகவும், இனத்திற்காகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். பகுத்தறிவு உள்ளவர்களை பற்றிதான் கவலைப்பட வேண்டும். பைத்தியங்களையோ, கூலிகளையோ பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும்” எனப் பேசினார்.