Skip to main content

பாம்பிடம் மாட்டிக் கொண்ட குட்டி; மீட்கப் போராடிய தாய் அணில் - பயணிகள் முன்பு நடந்த பாசப் போர்.

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Rescue of the little squirrel trapped by the snake

 

ஐந்தறிவு கொண்ட பாலூட்டி வகை விலங்கினமான அணில், தன் பாசப் போராட்டத்தை பிள்ளையைக் காப்பற்றப் போராடியதை இந்தப் பிரபஞ்சத்திற்கு உணர்த்தியது, திரண்டிருந்த ரயில் பயணிகளை உருக வைத்துவிட்டது.

 

தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரமான சங்கரன்கோவில் நகரின் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும். நீண்ட நெடிய தொலைவைக் கொண்ட ரயில்வே நடை மேடையில் தகர ஷெட்டால் அமைக்கப்பட்ட மேற்கூரையின் ஒரு பகுதியில் அணில் ஒன்று கூடு கட்டி தனது பிள்ளையைp பொத்திப் பாதுகாத்து வந்தது. இச்சூழலில் வெயிலின் தாக்கம் காரணமாக இளைப்பாற நிழல் தேடி அலைந்த ஐந்தடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு (நல்ல பாம்பின் மறு வடிவம்) ரயில் நிலைய மேற்கூரையில் ஏறிப் பதுங்கியபோது அருகிலுள்ள கூட்டிலிருந்த குட்டி அணில் பிள்ளையைக் கவ்விய கணத்தில் விழுங்கியது. வயிறு முட்டல் காரணமாக நகர முடியாத அந்தப் பாம்பு மேற்கூரையின் அந்தரத்தில் தொங்கியதைக் கண்ட ரயில் பயணிகள் உடனே ரயில்வே நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே தன் பிள்ளையைக் காணாமல் தவித்த தாய் அணில், பாம்பின் வாயில் பிள்ளை சிக்கிக் கொண்டதைப் பார்த்த தவிப்பில் காப்பாற்ற வேண்டி அலை பாய்ந்தது. யாராவது உதவுங்களேன் என்ற பரிதவிப்பில் கீச்... கீச்... என்று கத்திக் கதறியபடி பதறப் பதற ஓடியது. 

 

Rescue of the little squirrel trapped by the snake

 

இந்த நிலையில் தகவலின் பேரில் அப்பகுதியின் பாம்பு பிடி நிபுணரான பரமேஷ் தாஸ் விரைந்து வந்தவர், சரசரவென மேற்கூரையில் ஏறினார். சாரைப் பாம்பை சாதுர்யமாகப் பிடித்தவர், இரைக்காக அதன் வாயில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டி அணில் பிள்ளையை உயிருடன் பத்திரமாக மீட்டவர் அதை பிளாட்பாரத்தில் விட்டபோது தவித்துக் கொண்டிருந்த தாய் அணில், மீட்கப்பட்ட தன் குட்டியைப் பாசத்தோடு சுற்றிச் சுற்றி வந்தது.

 

குட்டி சிக்கியதையும் தாய் அணிலின் பாசப் போராட்டத்தையும் மீட்கப்பட்ட பின் அதன் உருக்கத்தையும் கண்ட ரயில் பயணிகளின் கண்களில் அனந்தக் கண்ணீர். தாமதமின்றி செயல்பட்டு குட்டியை உயிருடன் மீட்டு ஒரு தாயின் தவிப்பைத் தணித்து சந்தோசத்தில் தாய் அணில் குதித்தோடிச் செல்ல உதவிய பரமேஷ் தாஸை, பயணிகள் மனதாரப் பாராட்டினர். ஐந்து இன்ச் நீளமுள்ள அணில் தான் என்றாலும் பிள்ளைப் பாசத்தில் சற்றும் சளைத்ததல்ல. அணிலின் இந்தப் பாசப் போர் சமூக வலைத்தளத்தில் வைரல்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாரை பாம்பைச் சமைத்துச் சாப்பிட்ட சம்பவம்; வைரல் வீடியோவால் வசமாக சிக்கிய இளைஞர்

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Youth arrested for eating snake juice

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன்  தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள்  இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருமாபட்டு கிராமத்திற்குச் சென்று ராஜ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கறியாக்கி சாப்பிட்டதை ஒப்புக்கொண்டார். எதற்காக இப்படி செய்தாய் எனக்கேட்ட அதிகாரிகளிடம், அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெருகும், ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க. அதான் பாம்பை தேடிப்பிடிச்சி அடிச்சி சாப்பிட்டேன் என்றதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். 

Next Story

'காமராஜர் திறந்து வைத்த பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள்'-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
nn

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நாளை (10/06/2024) திறக்கப்பட இருக்கின்றன. இதற்கு முன்பாகவே, பள்ளிகளை திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தவேண்டும்; பள்ளியில் தூய்மையான குடிநீரை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வி துறை வழங்கியுள்ளது.

nn


இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளியில் கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் சமூக விரோதிகள் நடமாட்டத்தால் மது பாட்டில்கள் ஆங்காகே கிடப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி 1966 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அப்பள்ளி கட்டடங்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மேஜைகள் உள்ளிட்டவை முழுவதுமாக சேதமடைந்து பள்ளிக்கூட வளாகத்தின் ஒரு அறையில் கொட்டப்பட்டுள்ளது. அதேபோல் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்ததால் ஆங்காங்கே காலி மது பாட்டில்களும் கிடக்கிறது. உடனடியாக பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும், சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.