Skip to main content

புதிதாகத் திறக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தில் விரிசல்கள்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Repairing the cracks in the new classroom building is in progress

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி வளாகம் போன்றவற்றைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைவினாயகர்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்த போது கட்டடத்தின் தரைதளம் மற்றும் சுவர்கள் உடைப்பு, விரிசல் இருப்பதைபபார்த்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம், இதெல்லாம் என்ன இப்படித்தான் வேலை செய்வீங்களா என்று கூறி உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றனர். அதன் பிறகு அவசர அவசரமாக உடைப்புகளைச் சரி செய்யும்விதமாக ஆங்காங்கே சிமெண்ட் பூசியும், வெடிப்புகளில் பட்டியும் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அந்த கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். முதலமைச்சர் திறந்து வைத்த போது அந்தப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.

முதலமைச்சர் திறந்து வைத்த பிறகும் பள்ளி வகுப்பறைக் கட்டடத்தில் ஏற்பட்டிருந்த உடைப்புகளுக்குப் பஞ்சர் ஒட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்