சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (03.08.2024) திறந்து வைத்தார். இதனையடுத்து பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு நவீன வசதிகளை அவர் பார்வையிட்டார்.
அதோடு இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதனையடுத்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2024யும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களை (All Terrain Vehicles) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவைச் சுற்றிப்பார்க்கப் பார்வையாளர்களுக்கு இன்று (03.08.2024) ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை (03.08.2024) முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பூங்காவை இலவசமாகப் பார்வையிடவும், 5 முதல் 12 வயது வரை உடையவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.60 எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, சென்னை துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா எனப் பலரும் கலந்து கொண்டனர்.