கோப்புப்படம்
திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எனவும், தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில்,
MeToo என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்விவகாரத்தில் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை.
பிரதமர் மோடியை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் எனவும், அதிமுகவினரை சர்க்கஸ் கூடாரம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். சர்க்கசில் புலி, சிங்கம் தான் இருக்கும். மேலும் அதிமுகவினரை சிங்கம், புலி என ஸ்டாலின் ஏற்று கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக ஸ்டாலினுக்கு நன்றி.
திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா? தேர்தலுக்கு பின்னர் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என திமுக கூறினால், அது கபட நாடகம். மறைமுகமாக திமுக பாஜக உடன்பாடு வைத்துள்ளதால்தான் ராகுல்காந்தியை பிரதமராக அறிவிக்க திமுக தயாராக இல்லை.
அதிமுக தனித்து போட்டியிட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமரை முடிவு செய்வோம்.
எந்த கூட்டணியிலும் அதிமுக இல்லை. 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதிமுகவிற்கு கவலையில்லை. முதல்வர் மீதான சிபிஐ விசாரணை குறித்து கருத்து சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது எந்த கலங்கமும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார். திமுக ஆட்சியில் அதிக ஊழல் நடந்தது என முதல்வரே கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை. 5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக ஆட்சி செயல்படும். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என தெரிவித்தார்