Skip to main content

ரணில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி, ஜவாஹிருல்லா சந்திப்பு... 

 

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், இலங்கையின் நகர்ப்புற துறையின் அமைச்சருமான ரவூஃப் ஹக்கீமின் மகளுக்கு இலங்கையில் திருமணம் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த ஹக்கீம், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அழைப்பு கொடுத்திருந்தார். 

 

sri lanka


 

அதன் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தின், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக துணைத்தலைவர் குணங்குடி அனிபா, ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகமது யூசுப்  உள்ளோட்டோர் இலங்கைக்கு சென்றிருந்தனர். 

 

sri lanka


இந்த பயணத்தின் ஒரு நிகழ்வாக,  இலங்கையின் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை, இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. 
 

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மனு ஒன்றை ரணில் விக்கிரமசிங்கேவிடம் கொடுத்தார். 
 

அந்த மனுவின் சாரம்சம்:-
 

இலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரம பாகுவின் அமைச்சரவையில் 16 அமைச்சர்களில் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள். அது போலவே பல சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிமளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. தற்போதையை தங்களது (ரணில்) ஆட்சியில் பேரரசர் மகா பராக்கிரம பாகுவையே மிஞ்சும் வகையில் 9 முஸ்லிம்களை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள். இனவாதம், மதவாதம் இல்லாத தலைவராக  முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளீர்கள். இலங்கையில் முஸ்லிம்கள் ஒவ்வொருமுறை காயப்படுத்தும் பொழுதும் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியையும் செய்து வந்துள்ளீர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.


 

 


கடந்த ஏப்ரல் மாதம் 21 அன்று  ஈஸ்டர் தினதன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன்,  முஸ்லிம்களால் வெறுக்கப்படும்  ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது.  இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். அந்த தருணத்தில்  ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒரு போதுமில்லை என்று தெள்ளத்தெளிவாக தாங்கள் (பிரதமர் ரணில்) அறிவித்தமைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


 

 


குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டில் அவசர  கால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.. சந்தேகத்தின் பேரில் அவசர கால சட்டத்தின் கீழ் சுமார் 300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  தடை விதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இலங்கையில் வாழும் நாட்டுபற்றுள்ள முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மிக பெரும் கவலையையும் வேதனையையும் அடைந்துள்ளார்கள்.

 

sri lanka


ஆடை உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ள கலாச்சார பண்பாடுகள் ஒரு போதும் வெறுப்புணர்வையோ, குரோதத்தையோ ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு வித்திடாது. ஆனால் இனவாதம் போன்ற சமூத தீமைகள் நிச்சயம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் பணியை திசைத்திருப்பவும் ஆடை ஒரு பிரச்னையாக எழுப்ப்படுகிறது.  முஸ்லிம் சமுதாயம் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக தான் இருப்பார்கள்.


 

sri lanka


 
அவசர கால சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது போல  முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

sri lanka


 
மேலும் மதரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். ஏப்ரல் 21 பயங்கரவாத நிகழ்விற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 

sri lanka


இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே தாங்கள் இலங்கையின் பிரதமராக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே தங்களுக்கு வாக்களித்தார்கள்.  தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்பதும் என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்பதும் தமிழர்களின் தமிழர்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன. அவற்றை தாங்கள் விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றித் தரவேண்டும்.

 

sri lanka


 
இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக பிரதமர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும்  நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.
 
 


மேலும் இலங்கைக் கடற்படையினரால்  கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு மனிதநேயம் தலைத்தோங்கவும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் பிரார்த்தனை செய்து நிறைவுச் செய்கிறேன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்