Skip to main content

அஞ்சு இடம் மாத்தியாச்சு... சுட்டெரிக்கும் வெயிலில் மீன்விற்கும் பெண்கள்!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020


 

ramanadhapuram district fish sales womens summer


ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களை மாற்றியும், நிலையான இடமின்றி சுட்டெரிக்கும் வெயிலில் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள சாலையோரத்தில் மீன்களை விற்பனை செய்கின்றனர் சுமார் 40- க்கும் மேற்பட்ட பெண்கள்.
 


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள மக்களின் உணவுத் தேவைக்காக அருகிலுள்ள தனுஷ்கோடி, சேராங்கோட்டை, கரையூர் மற்றும் கோதண்டராமர் கோவில் போன்ற பகுதிகளில் பாரம்பரிய மீனவர்களின் கட்டு மரங்களிலும், சிறு வல்லங்களிலும், கரைவலை மூலமாகக் கடலிலிருந்து பிடிக்கப்படக்கூடிய மீன்களை ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்குக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் சுமார் 40- க்கும் மேற்பட்ட பெண்கள். கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் ஒன்று கூடுதலைத் தடுக்க ராமேஸ்வரம் 2- ஆவது வார்டில் நடந்த மீன் விற்பனையைப் பேருந்து நிலையத்திற்கு மாற்றியது மாவட்ட நிர்வாகம். 

முறையான நிழற்குடை இல்லாமல் வெயிலில் கருகிய பெண்கள், மீண்டும் முன்பு மீன் மார்க்கெட் செயல்பட்ட இடத்திற்கு எதிரிலுள்ள பொன்னம்பிள்ளை தெருவிற்கு இடமாற்றம் செய்து விற்பனை செய்து வந்தனர். அதுவும் பின்னாளில் சந்தன மாரியம்மன் கோவில் அருகே கொண்டு செல்லப்பட்டு, ஒரு சில நாட்களிலேயே விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது. 

 

 


அதன் பின்பு துறைமுகம் பின்புறம் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்பொழுது ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. எந்தவொரு நிழலும் இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலோடு மீன் விற்பனையைத் துவக்கியுள்ளனர் மீனவப் பெண்கள். எனினும், "வெயிலின் கொடுமை அதிகரிப்பதால் மீன்கள் விரைவாகக் கெட்டுவிடுவதால், மீன்களைப் பொதுமக்கள் வாங்க மறுப்பதாகவும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" வேதனை தெரிவிக்கின்றனர் மீனவப் பெண்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

“பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Chief Minister M.K.Stalin says Modi, who is in the position of Prime Minister, is gloating

ஐந்தாவது முறையாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று (15-03-24) கன்னியாகுமரி பகுதி வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, “விஷ்வகுருவா மவுனகுருவா? இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி விளையாடுகிறது. இலங்கையில், நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ் - திமுக செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்துவிட்டது” என்று பேசினார். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால் தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்?

படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் சொல்லுங்க பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்க தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்” என்று பதிவிட்டுள்ளார்.