Skip to main content

தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு;  என்ன செய்யப் போகிறது தமிழகம்? - கேள்வியெழுப்பும் இராமதாஸ்!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Ramadoss talk about on cauvery issue

 

காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு  கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. இந்த நீர் தமிழகத்திற்கு போதுமானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும்,  துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர். கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

 

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால்,  கர்நாடகம் இதுவரை 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை. கர்நாடகத்திலிருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீரில் கூட பெருமளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்தது தானே தவிர, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டது அல்ல.

 

வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு திறந்து விடுமாறு காவிரி ஒழுங்குமுறை குழு ஆணையிட்டுள்ள தண்ணீரின் மொத்த அளவு 6.25 டி.எம்.சி மட்டும் தான். இதை விட பத்து மடங்கு அதிகமாக  63.80 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அணைகளில் உள்ளது. இவ்வளவு தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பது இரு மாநில உறவுகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் வலிமை சேர்க்காது.

 

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அறிவித்து விட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, அந்த முடிவின் பின்னணியில் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஒன்றாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இன்றைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது கடந்த 3 வாரத்தில் கூட்டப் பட்டிருக்கும் இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டமாகும். இதன் மூலம் நாளை நடைபெறவுள்ள  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு.

 

கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை. ஆனால், இந்த சூழலை தமிழ்நாடு எவ்வாறு சமாளிக்கப் போகிறது? கர்நாடகத்திடமிருந்து எவ்வாறு தண்ணீர் பெறப் போகிறது? என்பது குறித்து எந்த சிந்தனையும், செயல்திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. இது மிகவும் நல்வாய்ப்புக்கேடானது.  காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

 

உச்சநீதிமன்றத்திடம் வாதாடி தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். அது உடனடியாக நடப்பதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வழக்கு அன்றே விசாரிக்கப்படுமா? மீண்டும் ஒத்திவைக்கப்படுமோ? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தை மட்டுமே தமிழகம் நம்பிக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது.

 

காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்ற யோசனையை முதலில் தெரிவித்தது நான் தான்.  அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தமிழகம் தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் 21-ஆம் நாள் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஆனால், அந்த வழக்கில் இன்று வரை விசாரணை தொடங்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி இடைக்காலத் தீர்ப்பை பெற வேண்டும் என்ற யோசனையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இத்தகைய சூழலில் சட்ட நடவடிக்கையுடன் அரசியல் ரீதியிலான அழுத்தமும் கொடுப்பதன் மூலமாகவே காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு நீதியை பெற்றுத்தர முடியும்.

 

அத்துடன் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்  உள்ளன என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அதற்காகவும்,  காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; போராட்டத்தில் குதித்த விவசாய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Denial of entry for wearing a vest in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 

Next Story

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Increase in water flow in Cauvery River

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்திற்கு வினாடிக்கு 34 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (18.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (17.07.2024) மாலை வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மூன்றாவது நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.