Skip to main content

“கல்லூரிச் சேர்க்கை; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி” - ராமதாஸ் கண்டனம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
ramadoss said that Injustice to bc and mbc in college admissions

தமிழ்நாட்டில் கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார். திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகள் மூலம் 64% இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 36% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ளன. சில பாடப்பிரிவுகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இடம் இல்லாத நிலையும், சில பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் இல்லாத நிலையும் நிலவும் சூழலில், குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2 ஆம் நாள் பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘‘கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப  சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது’’ என்பது தான் அவர் பிறப்பித்திருக்கும் ஆணையாகும்.

கல்லூரிக் கல்வி இயக்குனர் பிறப்பித்திருக்கும் ஆணை சமூகநீதிக்கு மட்டுமின்றி, விதிமுறைகளுக்கும்  எதிரானது ஆகும். அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். அதற்காகத் தான் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த மாதமே நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று முதல் ஜூலை 5&ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அந்த நோக்கத்திற்கிணங்க பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும்.

அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்; அவை யாருக்கும் பயன்படாமல் வீணாகி விடும். இது அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு எதிரானதாகும். அரசின் கொள்கைக்கும், சமூகநீதிக்கும் எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்பதே என் வினா.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த மே 22 ஆம் நாள் அப்போதைய உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திக், அரசாணை (எண்:110) ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் இணைப்பில் இடம்பெற்றுள்ள 33 ஆம் பத்தியில் பழங்குடியினருக்கான இடங்கள் கடைசி வரை அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்களை பட்டியலினத்தவரைக் கொண்டும், அவர்களும் இல்லாவிட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினரைக் கொண்டும் நிரப்பலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், அவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அவை பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். முஸ்லீம் வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பலாம் என்றும் உயர்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இதே நடைமுறை தான் அரசு கலைக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், அதற்கு மாறாக பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு எந்தப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக்கூடாது என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட வகுப்பு  மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதன் மூலம், அவர்கள் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு தடுக்கப்படும். இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் செயலாளர் பிறப்பிக்கும் ஆணை தான் இறுதியானது. அதை மீறி, இப்படி ஒரு சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்கக் கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதையே புதிய வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூக அநீதி இழைப்பதற்காகவே இப்படி ஓர் ஆணையை கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் பிறப்பிக்கச் செய்ததா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8 ஆம் நாள் முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22 ஆம் நாளிட்ட உயர்கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நிரம்பும் கர்நாடக அணைகள்: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்” - ராமதாஸ்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Ramadoss said that Cauvery water should be opened immediately

கபினி அணை அடுத்த இரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள கர்நாடக  முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கபினி அணை அடுத்த இரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்திற்கான பங்கை தராமல், பாசனத்திற்கான தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கர்நாடகத்தின் குடகு மலை மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி  4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 26,156 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நான்கு அணைகளின் கொள்ளளவு 59.93 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. இது நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 52%க்கும் அதிகம். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் கடந்த ஜூன் 24&ஆம் தேதி நிலவரப்படி 37.96 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு வெறும் 4,448 கன அடி என்ற அளவில் தான் இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 43,506 கன அடி என்ற அளவை எட்டி, அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் காவிரி அணைகளுக்கு 22 டி.எம்.சி தண்ணீர் வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 19.52 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்புவதற்கு  இன்னும் ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவை. இதே அளவில் நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த இரு நாட்களில்  கபினி அணை நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. இம்மாத இறுதிக்குள் நான்கு அணைகளும் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

கர்நாடகத்தில் காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தான் நியாயம் ஆகும். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர்  விடுவது எந்த அறிவிப்பையும்  வெளியிடாத கர்நாடக அரசு, வரும் 8&ஆம் தேதி முதல் கர்நாடக பாசனத்திற்காக பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் காவிரி சிக்கலில் கர்நாடகம் வழக்கம் போல், அதன் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.

காவிரி நீர்ப்பகிர்வு வழக்கில் 2018&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி  தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட  தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.

தமிழ்நாட்டில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12&ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததை காரணம் காட்டி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக குறுவை சாகுபடி செய்வதற்கு பதிலாக  ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவான பரப்பில் தான் சாகுபடி செய்யப் பட்டிருக்கிறது. குறுவை சாகுபடி பரப்பை  அதிகரிக்கவும், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தொடங்கவும்  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆனால், காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான தமது கடமையை கர்நாடக அரசு உணர மறுப்பதும், காவிரியில்  தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காமல் இருக்கும் தண்ணீர் முழுவதையும் தாங்களே பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பதும் நியாயமற்றதாகும். கர்நாடகத்தின் இந்த செயல்களை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பதும் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். இதை அனுமதிக்க முடியாது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு, உறங்கும் போக்கை கைவிட்டு, நமது உரிமைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து  விடும்படி வலியுறுத்த வேண்டும். அதன் மூலம் காவிரி டெல்டா உழவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ரூட் தல' பேனருடன் வந்த கல்லூரி மாணவர்கள்; தடுத்து நிறுத்திய போலீசார் 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
College students with 'Root Thala' banner; Stopped by the police

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு சில மாணவர்கள் பேருந்தில் பேனருடன் வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு கல்லூரியின் கேட்டையும் மூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் 'ரூட் தல' என்ற பேனருடன் பேருந்தில் வந்ததோடு ஊர்வலமாக செல்லமுயன்றனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் குறிப்பிட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து பேனரை பறிமுதல் செய்து அறிவுரை செய்த அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கிய நிலையில் அந்தந்த ரூட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஒன்று சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறோம் என்ற பெயரில் தாமதமான நேரத்தில் ஊர்வலமாக பேனர் மற்றும் மாலையோடு கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனர். இதையறிந்த கல்லூரி முதல்வர் நுழைவாயிலை பூட்டுப் போட்டுவிட்டு சென்று விட்டார். அதனைத்தொடர்ந்து ஆவடியைச் சேர்ந்த சில மாணவர்கள் கையில் பேனர் உடன் ஊர்வலமாக செல்ல முயன்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.