Skip to main content

   கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்! ராமதாஸ்

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

பா.ம.க. நிறுவனர்  ராமதாசு அறிக்கை: ’’கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருட்களை தற்காலிகமாக சேமித்து  வைப்பதற்கான அணுக்கழிவு மையம் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி இராதாபுரத்தில்  நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அணு உலைகள் அமைக்கப்படுவதால் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களை கலவரப்படுத்தும் வகையிலான இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

 

r

 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் இரு அணு உலைகளை அமைத்துள்ளன. மூன்றாவது, நான்காவது அணுமின் உலைகளை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி எரிபொருட்களை பாதுகாப்பாக வெகுதொலைவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக தற்காலிக அணுக்கழிவு மையமும் (Away From Reactor -AFR), பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு மையமும் (Deep geological repository - DGR) அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இவற்றில் தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் மற்றும் விஜயபதி கிராமங்களில் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காகத் தான் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருக்கிறது.

 

கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது ஆகும். அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் அணுக்கழிவுகள் அணு உலை வளாகத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வைத்து குளிர்விக்கப்பட வேண்டும். அதன்பின்னர் அவை தற்காலிக அணுக்கழிவு மையத்திலும், பின்னர் நிரந்தர அணுக்கழிவு மையத்திற்கும் பாதுகாப்பான முறையில் மாற்றப்பட வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டில் முதலாவது அணு உலை செயல்பாட்டுக்கு வந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 2018-ஆம் ஆண்டிற்குள்  தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தற்காலிக மையம் அமைக்கப்படாத நிலையில், 2022-ஆம் ஆண்டுக்குள் அதை அமைக்க அணுமின்கழகம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.அதன்படி தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதற்காகவே கூடங்குளம் - விஜயபதி கிராமங்களை அணுமின் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது.

 

2018-ஆம் ஆண்டிற்குள் அணுக்கழிவு மையம் அமைக்கப்படாததற்கு காரணம் என்ன என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் கேட்ட போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘‘தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை’’ என்பது தான். கூடங்குளம் அணுமின்உலைகள் மென்நீரில் இயங்கக்கூடியவை என்பதால் அதற்கான தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்றும் அவர் கூறியிருந்தார். முழுமையான தொழில்நுட்பமும் இல்லாமல், தெளிவான இலக்கும் இல்லாமல் அமைக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்?

 

கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதுடன் அனைத்தும் முடிந்துவிடப் போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தற்காலிக மையத்தில் உள்ள அணு எரிபொருட்கள் மிகவும் அதிக ஆழத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர மையத்திற்கு மாற்றப்பட வேண்டும். ஆனால், அத்தகைய மையத்தை எங்கு அமைப்பது? என்பதே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள சுரங்கங்களில் அமைக்கலாம் என 2012-ஆம் ஆண்டு   தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அங்கு நிரந்தர மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் புதிய இடம் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியா இன்று வரை உருவாக்கவில்லை.

 

எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல், எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் பெயரளவில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு நிலநடுக்கம் தாக்கிய போது மிகப்பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதற்கு காரணம் புகுஷிமா அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணுசக்திக் கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாதது தான். இதையெல்லாம் உணராமல் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால், ஜப்பானில்  ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

 

கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பு, அப்பகுதியின் சுற்றுச்சூழல், கடல் சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக குரல் கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அப்பகுதி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியதற்காக இரு வழக்குகளை சுமந்ததுடன், சிறைவாசமும் அனுபவித்தவன் நான். அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தற்காலிக அணுக்கழிவு மையத்தை  கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்பது தான். தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, அதற்கான பணிகளை அரசு தொடங்கினால் போதுமானது. இப்பணிகள்  வெற்றிகரமாக நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும்.’’
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Ramadas has insisted Tamil Nadu government should conduct the caste-wise census

 

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்; தமிழகஅரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும்,  வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டிருப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்.

 

அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல. இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது.  சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள்.

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் இந்த சிக்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார். 2004-ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி, இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு முன் 24.10.2008 -ஆம் நாள்  அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை எனது ஆணையின்படி, சந்தித்து 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்தார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீலும் அப்போது ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது பா.ம.க.வின் கோரிக்கைக்கு லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார்.

 

அதைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

 

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை எத்தனை முறை வலியுறுத்தினாலும்,  அதற்கு மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் இறுதியில் அந்த முயற்சியை மத்திய அரசே சீர்குலைத்து விடும். கடந்த காலங்களிலும் இது தான் நடந்தது; இனிவரும் காலங்களிலும் அது தான் நடக்கும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டில்  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும்  எதுவும் நடக்காததால் தான் பீகார் அரசின் சார்பில் சாதிவாரி  கணக்கெடுப்பை நடத்தினார்.

 

ஆந்திர மாநில அரசும் இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு எந்த பதிலும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதைக் காரணம் காட்டித் தான் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. நேரிலும், சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மூலமாகவும் வலியுறுத்திய பிறகும் ஏற்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை, தமது கடிதத்தைக் கண்டவுடன் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் நம்பிக் கொண்டிருப்பது விந்தை தான்.

 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட்டால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன். ஆனால், அதற்கான  வாய்ப்புகள் கண்களுக்கு எட்டியவரை தென்படாத நிலையில், அதை நம்பிக் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். தமிழக அரசு, அதன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் இருப்பதால், அதனடிப்படையில் நடத்தப்பட்ட பிகார் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவோ தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும்  மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மாநில அரசின் உரிமைகளை  விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளன. எனவே, இனியும்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும்  என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

'நீரும் வந்து சேரவில்லை; கண்துடைப்பு இழப்பீடு கூடாது' - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

nn

 

வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

 

தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட அதிகமாக நடப்பாண்டில் 5.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறந்து விடப்பட்டதும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் இதற்கு காரணம் ஆகும். ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததாலும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசு மறுத்து விட்டதாலும் நடப்பு சாகுபடி ஆண்டில், இன்று வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 127.05 டி.எம்.சி நீரில் 40 டி.எம்.சி தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை.

 

கடந்த ஒன்றரை மாதங்களாகவே காவிரியில் போதிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. முன்கூட்டியே நடப்பட்ட பயிர்கள், நிலத்தடி நீரைக் கொண்டு பாசன வசதி பெற்ற பயிர்கள் என ஒட்டுமொத்தமாக இரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிர்கள் கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் கூட சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை ஓரளவு பாதிப்புடன் காப்பாற்றி விட முடியும்.  

 

அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33 அடியாகவும், நீர்இருப்பு 9 டி.எம்.சியாகவும் குறைந்து விட்ட நிலையில், அணையிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும். அத்தகைய சூழலில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது.  அவ்வாறு  இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

 

காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.

 

இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து  ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

 

ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.