Skip to main content

‘ராஜீவ் கொலை - ஆயுள் கைதி’ ரவிச்சந்திரனுக்கு பரோல்! அருப்புக்கோட்டை வீட்டில் பலத்த பாதுகாப்பு!

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
barol

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி என்ற ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆயுள் கைதி ஆவார். இவர் பாகப்பிரிவினை மற்றும் பத்திரப்பதிவு சம்பந்தமாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பரோல் கேட்டிருந்தார். சில நிபந்தனைகளுடன் அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம்.

ராஜீவ் கொலையில் ரவிச்சந்திரனின் பங்கு என்ன?

‘ராஜீவ் கொலையாளிகள் சிவராசனையும், சுபாவையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார் விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான். சிவராசனோ, ராஜீவ் கொலையான பிறகு, இலங்கைக்குச் செல்லாமல், கடலே இல்லாத பெங்களூர் சென்றார். தன்னுடன் உள்ள பிறரையும் தப்பிக்கவிடாமல் தடுத்தார்.’ என்று தான் எழுதிய ‘ராஜீவ் காந்தி படுகொலை; சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னணி இது -

விருதுநகர் மாவட்டம் – அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தமிழ் மற்றும் தமிழர்கள் மீதுள்ள பற்றினால், இலங்கை சென்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். விடுதலைப்புலிகள் இயக்க தளபதியான சூசையின் கீழ் பணியாற்றிய இவர்,  இந்திய அமைதிப்படைக்கு எதிராக நடத்திய கடும் போரில் முக்கிய பங்காற்றினார். 1987-இல் தமிழகம் திரும்பினார். தமிழ் தேச மீட்பு முன்னணி என்ற பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்கினார். 1991, மே 21-இல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ராஜீவ் கொலையில் ரவிச்சந்திரனுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி,  சிபிஐ இவரைக் கைது செய்தது.

தான் எழுதிய புத்தகத்தில் –

‘ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு,  ஆர்.டி.எக்ஸ் உட்பட 4 வகையான வெடி மருந்துகளால் தயாரிக்கப்பட்டது. இதில், ஆர்.டி.எக்ஸ். மட்டுமே இந்தியாவில் கிடைக்கக் கூடியது.  மற்ற மூன்று வகையான வெடி மருந்துகளும் அமெரிக்கா மற்றும் இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தக் கூடியவை.

பல்வேறு வங்கிகளில் ஒற்றைக்கண் சிவராசன் கணக்கு வைத்திருந்தார். ராஜீவ் கொலைக்காக அரசியல் சாமியார் சந்திரசாமி மூலம் அமெரிக்க உளவுப்பிரிவு சி.ஐ.ஏ. பெரும் தொகையை வழங்கியது. இந்த விபரங்களை விசாரிக்கவிடாமல் சி.பி.ஐ. யை சிலர் தடுத்தார்கள். ராஜீவ் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்களைக் கொலை செய்யும்போது, எந்த ஒரு தடயத்தையும் விடுதலைப்புலிகள் விட்டுச்செல்ல மாட்டார்கள். தடயங்களை அழித்துவிட்டே சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து வெளியேறுவார்கள். ராஜீவ் கொலையிலோ, வேண்டுமென்றே சில தடயங்கள் விட்டுச் செல்லப்பட்டன. சம்பவ இடத்திலேயே போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார். அவரது கேமராவை சிவராசன் எடுத்துச் செல்லாமல், அங்கேயே விட்டுச் சென்றார். சிவராசனின் இந்தச் செயல்பாட்டில் பல சந்தேகங்கள் உள்ளன.’ என்று பல அதிரடியான தகவல்களைக் கூறியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி என்பதால், அருப்புக்கோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பரோலில் சென்றபோது, டி.எஸ்.பி. தனபால் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 11 சப்-இன்ஸ்பெக்டர்கள், 80 போலீஸார் என, பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டில் 4 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியிருந்தனர். ரவிச்சந்திரனை சந்திக்க வருபவர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

சார்ந்த செய்திகள்