Skip to main content

“என்னைக் காப்பாற்றிய எஸ்.பி. வேலுமணிக்கு இடைஞ்சல்”  - ரகசியம் உடைத்த ராஜேந்திர பாலாஜி!  

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Rajendra Balaji said that it was SP Velumani who saved me from trouble

 

சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசினார். “உங்கள் மத்தியில் இப்போது ஒரு உண்மையை நான் சொல்கிறேன். எனக்கு திமுக ஆட்சியில் பிரச்சினை ஏற்பட்டபோது, என்னைப் பாதுகாத்தவர் அண்ணன் எஸ்.பி. வேலுமணிதான். 21 நாட்கள் என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். தொண்டர்களுக்குத் தோழனாக உழைக்கக்கூடிய அண்ணன் வேலுமணி என்னையும் பாதுகாத்தார். 

 

எங்கு பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதம் நடைபெறுகிறது. இந்தக் காலம் திமுகவுக்கு இறங்குமுகம். அதிமுகவுக்கு ஏறுமுகம். எஸ்.பி. வேலுமணி அண்ணனுக்கு திமுக எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கிறது என்பது நமக்குத் தெரியும். வேலை செய்யக்கூடியவர்களை முடக்கிவிடும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுகவின் நடவடிக்கை இன்றைக்கு கேலிக் கூத்தாகிவிட்டது. திமுகவுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு திமுகவினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. பிறரைக் கெடுக்க நினைத்தவர்கள் இன்று கெட்டுப்போய் உள்ளனர். வருங்காலம் அதிமுகவின் காலம்தான்.” எனப் பேசினார்.  

 

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி அக்கூட்டத்தில் பேசியபோது, “திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பேசக்கூடியவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. செய்யாத குற்றத்துக்காக அவரை திமுக அரசு பழி வாங்கியது. ஒன்றுமே செய்யாத கே.டி. ராஜேந்திர பாலாஜியை கொலைக் குற்றவாளிபோல் போலீசார் தேடினார்கள். பொய் வழக்கு போடுவதையே திமுக தொழிலாகக் கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருப்பார்.” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த புதுச்சேரி பாஜக

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Puducherry BJP shocks AIADMK

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதேநேரம் புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தலுக்கான தீவிரப் பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன, இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''இந்த தேர்தலில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நம்முடைய புதுச்சேரியினுடைய பாராளுமன்ற இடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று. வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி புதுச்சேரி வருவார்'' எனவும் தெரிவித்தார்.

Puducherry BJP shocks AIADMK

அண்மையில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசி இருந்தார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இது மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணிக்கான அடித்தளம் என்றும் பேசப்படட்டது. புதுச்சேரியில் பாஜகவிற்கு வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்படுத்தி 6 சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது.

தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இதனால் பாஜகவிற்கு வாக்குகள் குறைந்துவிடும் என்ற நிலையில் அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் புகைப்படங்களை வைத்து புதுச்சேரியில் பாஜக வாக்குகளை கேட்டு வருகிறது. அக்கட்சியின் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையில் பாஜக ஈடுபட்டிருப்பது அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

'சில கெட்ட சக்திகள் வெளியேறியுள்ளது'-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
nn

காங்கிரஸில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி அண்மையில் பாஜகவில் சேர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அதேநேரம் தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருக்கிறார். யார் கண்டிப்பாக தோற்பார்கள் என்ற பட்டியலை இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள். நம்முடைய ஊரின் சாம்பார் பிடித்திருக்கிறது போல அதனால் தான் மோடி அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.

திமுக கூட்டணியில் சுமூகமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து வெளியிடப்படும். இழுபறி எல்லாம் இல்லை. கண்டிப்பாக இந்த தேர்தலோடு காணாமல் போகப் போகிறவர் யார் என்றால் மோடி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். தமிழகமே அவர்களுடைய சொந்த பூமி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து வருகின்ற பணத்தையோ, நிதியையோ, வரியையோ மீண்டும் தமிழக வளர்ச்சிக்கு கொடுக்கலாமென்று இல்லாமல் அவர்கள் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழரை லட்சம் கோடி ரூபாயை மோடி சுருட்டி இருக்கிறார். உலக வரலாற்றில் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், லஞ்சம் ஊழல் எங்கேயும் நடந்தது இல்லை'' என்றார்.

விஜயதரணி பாஜகவிற்கு சென்றது குறித்து கேள்விக்கு, ''சில கெட்ட சக்திகள், மோசமான சக்திகள் காங்கிரசை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியேறி இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்''எ ன்றார்.

'தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன' என்ற கேள்விக்கு, ''தமிழகத்தில் கஞ்சா குடிக்கும் பழக்கம் என்பது நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. இப்போது அதை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கும் பொழுது பல இடங்களில் தப்புத் தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். அதிமுகவில் எத்தனை சமூகவிரோதிகள் இருக்கிறார்கள் என பட்டியல் எடுத்தால் தமிழகத்தில் பாஜகவிற்கு அடுத்து அதிகமாக குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான் என்பது தெரிய வரும்'' என்றார்.