
ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஊர்ப் பொது மண்டபத்தில் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். அந்த மண்டபத்தில் இதற்கு முன் திமுக நிகழ்ச்சிகளை நடத்திய வகையில் மண்டப வாடகை தரவில்லை என புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில், வரும் மாதங்களில் திமுக நிகழ்ச்சிகளை அந்த மண்டபத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஊர் நிர்வாகி குருநாதன் “ராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவர் கல்பனாவின் கணவர் குழந்தைவேலிடம் ஏற்கனவே நிலுவையில் உள்ள மண்டப வாடகையைக் கேட்டபோது, தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தினார். அதிகாரம் கையில் இருப்பதால், பொய் புகார் தந்து காவல்துறை மூலம் அச்சுறுத்துகிறார். இதுகுறித்து, 32வது வார்டு பொதுமக்கள் சார்பில் ராஜபாளையம் நகராட்சி ஆணையரிடமும், ராஜபாளையம் எம்.எல்.ஏ.விடமும் புகார் கொடுத்திருக்கிறோம்.” என்கிறார்.
குழந்தைவேலோ “இது முழுக்க முழுக்க அரசியல். முனிசிபல் எலக்ஷன் நடந்ததுல இருந்து தொடர்ந்து இதுபோல குற்றம் சொல்லிக்கிட்டிருக்காங்க.” என்கிறார். குருநாதன் உள்ளிட்ட ஊர்ப் பொறுப்பாளர்கள் மனு கொடுப்பதற்கு வந்தபோது, ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியனிடம் வாக்குவாதம் செய்ததால், ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் பரபரப்பானது.