ராஜபாளையம் வட்டம் – ஆலங்குளம் அருகே கொங்கன்குளத்தில் R.V.K. தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ஜெயகிருஷ்ணா. அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அந்தப் பள்ளிக்கு அருகில் வீசி விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தடவையும் அந்த இடத்தில் காலி பாட்டில்களைச் சுத்தம் செய்யும்போது, தலைமை ஆசிரியை ஜெயகிருஷ்ணா சத்தம் போடுவார்.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி தன் வீட்டைப் பெருக்கிவிட்டு, ஜெயகிருஷ்ணா குப்பைத் தொட்டியில் குப்பை போடச் சென்றபோது, குடிபோதையில் இருந்த மாரிச்சாமி என்பவர், “எப்போது பார்த்தாலும் என்னை எதற்காக சத்தம் போடுகிறாய்?” என்று திட்டியபடி கையில் வைத்திருந்த கம்பால் மாறிமாறி அடித்திருக்கிறார். இதைப் பார்த்து தலைமை ஆசிரியை ஜெயகிருஷ்ணாவின் தந்தை சுப்புராம் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து விலக்கிவிட, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார் மாரிச்சாமி.
ஜெயகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் காவல்நிலையம் மாரிச்சாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.