Skip to main content

மழைக்கு தஞ்சம் புகுந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்... தூக்கத்திலேயே 9 பேர் உயிரிழப்பு!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

rain incident in vellore...

 

வேலூரில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்துவரும் நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெய்த மழை மற்றும் அங்கிருந்த காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மசூதி தெருவில் ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பிற்காக பர்கூஸ் என்பவரது வீட்டில் மழைக்காலங்களில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், நேற்றிரவும் (18.11.2021) மழை காரணமாக அவரது வீட்டில் தங்கியுள்ளனர். மொத்தமாக நேற்றிரவு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் அந்த வீட்டில் படுத்துறங்கிய நிலையில், இன்று காலை வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 9 பேர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பார்வையிட்டுவருகிறார். நான்கு குழந்தைகள், பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழையால், வீடு இடிந்து பலமணி நேரம் கழித்தே அப்பகுதி மக்களுக்கு இந்த விபத்து குறித்து தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்