தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், யாரிடமும் எந்த பரிசுப் பொருட்களும் வாங்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில், திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் இடைத்தரகராக இருந்து செயல்பட்ட சோமசுந்தரம் என்பவரிடமிருந்த கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும், அலுவலகத்தில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில், தொடர்ந்து அதிரடி சோதனை நேற்று இரவுவரை நடைபெற்றது.