எத்தனை வளர்ச்சிகள் பெற்றாலும் இன்னும் அறியாமையால் கொத்தடிமைகளாக மக்களை வைத்து சம்பாதிக்கும் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

கடந்த சில வருடங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த 200 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதாவது பாண்டிச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களைச் சேர்ந்த மக்களை கடன் கொடுத்து அந்த கடனின் வட்டிக்காக அந்த குடும்பத்தையே ஆண்டுக்கணக்கில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி அவர்களின் உழைப்பில் கொழுத்து வாழ்பவர்கள் பலர். புத்தக பைகளுடன் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள் கூட அரிவாளை எடுத்துக் கொண்டு கரும்பு தோகை நீக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள வீரப்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளிகள் தங்கி இருப்பதும் அவர்களுடன் 17 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை ஒருவர் கொத்தடிமையாக வைத்து கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபடுத்தி அவர்களின் சம்பளத்தை தான் வாங்கிச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து புதுக்கோட்டை கோட்டாச்சியர் தண்டாயுதபாணி குழுவினர் ஆய்வுக்குச் சென்று அவர்களை மீட்டு வந்து அலுவலகத்தில் வைத்து விசாரனை செய்தனர்.

அப்போது அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வாங்கிய கடனுக்காக குடும்பத்துடன் உழைப்பதாகவும் உழைப்பில் வரும் சம்பளம் வட்டிக்காக மட்டும் கழிக்கப்படுகிறது. சாப்பாட்டுக்கு கூட சரியாக பணம் கொடுப்பதில்லை என்றும், அதனால குழந்தைகளை படிக்க வைக்கமுடியாமல் தங்களுடன் வேலைக்கு வைத்துள்ளதாக கூறியுள்ளனர். அவர்கள் மீட்கப்படதுடன் அவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியும் அவர்களை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கிய நபரை பிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
மேலும் இதே போல ஆடு மேய்ப்பதற்கும் சிறுவர்களை ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம், 10 ஆயிரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதும் பரவலாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. வறுமை இப்படி சிறுவர்களையும் கொத்தடிமைகளாக்கிவிடுகிறது.