குறிஞ்சி நிலமான மலைகளின் அரசி நீலகிரி பகுதியில், பல சிறப்புகளில் குறிஞ்சி மலர்களும் ஒன்று. மணி வடிவில் நீல நிறத்தில் உள்ள இம்மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளின் இயற்கையாகவே வளர்ந்துள்ள ஒரு தாவரம். ஸ்ட்ரோ பிலாந்தஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் ஓராண்டு இடைவெளி முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்க கூடியது.
ஆசிய கண்டத்தில் 150 வகை குறிஞ்சியும், இந்தியாவில் 150 வகை குறிஞ்சியும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரியில் மட்டும் 30 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. நீலகிரியில் தற்போது உதகை அடுத்த சின்னக்குன்னூர் மலை சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
இக்கால கட்டத்தில் இம்மலர்களில் தேன் அதிகமாக இருப்பதால் தேனீக்கள் இதனை சேகரிக்க தொடங்கும். அதே வேளையில் பழங்குடியின மக்களான இருளர் மற்றும் குரும்பர் இன மக்கள் தேனீக்கள் கூட்டிலிருந்து தேன் சேகரிப்பில் ஈடுப்படுவர்.
உதகையிலிருந்து சுமார் 18 கி.மீ பயணித்தால் இந்த மலைப் பகுதியை அடையலாம். தற்போது பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.