Skip to main content

“போலி குற்றவாளிகளை உருவாக்கக்கூடாது” ; சி.பி.எம் - விசிக வலியுறுத்தல்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

pudukkottai vengaivayal issue

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் உள்ள முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் டிசம்பர் 25 ஆம் தேதி மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கலந்ததாகக் கண்டறியப்பட்டு பல்வேறு குழுக்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களிடமே விசாரணை செய்து வருவதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விசாரணை நேர்மையாகச் செல்கிறது என்று போலீசார் கூறுகின்றனர். மேலும் சிலரது செல்போன்களில் மனிதக் கழிவு கலந்த படங்கள், வீடியோக்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அந்த செல்போன்களை புலனாய்வு விசாரணை குழுவிடம் ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இதனால் விசாரணை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சமூகநீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள், முனைவர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ராஜேந்திரன் மற்றும் கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய துணைக் குழுவினர் இன்று வேங்கைவயல் கிராமத்தில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விசாரணைக்குழு அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்தோம். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மனிதக் கழிவு கலந்தது வன்கொடுமை தீண்டாமையின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. விசாரணை சரியாகத்தான் செல்கிறது. ஒரே பகுதி மக்களை விசாரிப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு., விசாரணை என்பது அப்படித்தான் நடக்கும் அதில் யாரும் தலையிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரை குடித்து மன உளைச்சலில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கான உதவிகள் வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் பேசிய பிறகு அரசுக்கு அறிக்கை கொடுப்போம் என்றார்கள்.

 

இதனையடுத்து தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை வேண்டும். போலி குற்றவாளிகளை உருவாக்கக்கூடாது என்று சிபிஎம், வி.சி.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சமூகநீதி கண்காணிப்பு துணைக் குழுவிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.