Skip to main content

"என்னுடன் படித்த 17 பேரில் 3 பேர் மட்டுமே இப்போது படிக்கிறோம்" - வேதனையில் ஆதனக்கோட்டை ஜெயலெட்சுமி

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

pudukkottai athanakottai jayalaxmi student 

 

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே நாசாவிற்கு செல்ல தேர்வான மாணவி ஆதனக்கோட்டை ஜெயலெட்சுமி. தங்கள் ஊரில் உள்ள சாலையோர முந்திரி கொட்டை உடைக்கும் அடுப்புகளில் வேலை செய்து கொண்டிருந்தார். நாசா செல்ல தேர்வானாலும் வறுமை வதைத்தது. நாசா செல்ல பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். ஆனால் கொரோனா முட்டுக்கட்டை போட்டது.

 

இந்த நிலையில் தான் மாணவிக்கு உதவி செய்ய கிராமாலாயா முன்வந்த போது நாசாவிற்கு போகவிடாமல் கொரோனா தடுத்து விட்டது என்பதை சொன்ன மாணவியிடம் உங்கள் வீட்டில் கழிவறை உள்ளதா? இல்லையென்றால் கட்டித் தருகிறோம் என்றபோது இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி, “என் வீட்டில் மட்டுமல்ல, எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால் என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுகிறோம். 2 கி.மீ. தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்குள்ள டாஸ்மாக் கடைகளை கடந்து போகணும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகணும். அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு வயசு பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க. அதனால எங்க ஊருக்கு எல்லாருக்கும் கழிவறை கட்டித் தர முடியுமா?” என்று கேட்டார். சுமார் 125 வீடுகளுக்கு கிராமாலாயா மூலம் கழிவறை கட்டிக் கொடுக்க வைத்தார்.

 

மாணவியின் இந்த செயலை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்டினார். கனிமொழி எம்.பி வீட்டிற்கே சென்று பாராட்டினார்கள். இப்படி ஏராளமான பாராட்டுகள், பரிசுகள், பதக்கங்கள் கிடைத்தது. மராட்டிய மாநிலத்தில் மாணவி ஜெயலட்சுமி எழுதிய கனவு மெய்ப்படும் என்ற கட்டுரை 7ம் வகுப்பு பாலபாரதி தமிழ் புத்தகத்தில் பாடமாகவே வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இவரது கனவு மெய்ப்பட விரும்பிய ஒரு படிப்பை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி கட்டணமில்லாமல் தருவதாகச் சொல்லி ஒரு வருடத்திற்குப் பிறகு ஏமாற்றியதால் இளங்கலை வரலாறு படித்துக் கொண்டிருக்கிறார்.

 

pudukkottai athanakottai jayalaxmi student 

 

தன்னுடைய இலக்கு யூபிஎஸ்சி தான் அதற்காக படித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக 11 சான்றிதழ் படிப்புகளையும், ஒரு பட்டயப் படிப்பையும் முடித்துவிட்டேன். 3 உலக ரெக்கார்ட் செய்துவிட்டேன். ஆனால், தன்னைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பாமல் குழந்தை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். என்னுடன் படித்த 17 பேரில் 3 பேர் மட்டுமே இப்போ மேற்கொண்டு படிக்கிறோம். மற்றவர்களில் பலர் திருமணமாகி விட்டனர். என்னை விட நன்றாக படித்த என் தோழியும் இன்று குழந்தையுடன் இருக்கிறாள். படிக்க ஆசையா இருக்கு. ஆனால், படிக்க முடியல என்று கண்ணீர் வடிக்கிறாள்" என்று வேதனையாகச் சொல்லி முடித்தார். இன்னும் நிறைய மாற வேண்டும், மாற்ற வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேங்கை வயல் சம்பவம்; அவகாசம் கேட்கும் சிபிசிஐடி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
vengaivayal incident; CBCID seeking time

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகிறது. விசாரணை 545 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல்பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தற்பொழுது இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருக்கிறது. வருகின்ற மூன்றாம் தேதிக்குள் (ஜூலை 3) இந்த வழக்கை முடிக்க சென்னை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தது.  அதனடிப்படையில் ஜூலை மூன்றாம் தேதி இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். இந்த அதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்துதல்; வழக்கு என்ன நிலையில் இருக்கிறது; வழக்கு முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

The website encountered an unexpected error. Please try again later.