புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்குக் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.
இந்த நிலையில் இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயிலிலிருந்து நடைப்பயிற்சி சென்றது. அப்போது கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்தது. சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறினார்கள்.
மக்களுக்கு மிகவும் நெருக்கமான லட்சுமி யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு சடங்குகள் நிகழ்த்திய பிறகு மாலையில் முத்தியால் பேட்டை பஜனை மட வீதி இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டு யானை லட்சுமி பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததைப் போல யானை லட்சுமியை பார்த்து தழுவி மலர்கள் தூவி கதறி அழுதும் கண்ணீர் விட்டும் அஞ்சலி செலுத்தி வரும் காட்சி கல் நெஞ்சையும் கலங்க வைக்கிறது.