
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளை திருடியவரை பொதுமக்களே மடக்கிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில், தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். 57 வயதான இவர் அங்குள்ள கைத்தறி நெசவாளர் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பாலசுப்பிரமணியன் நேற்று மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை யாரோ இயக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக பாலசுப்பிரமணியம் வெளியில் சென்று பார்த்தபோது, ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது தெரியவந்தது.
ஆனால் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர், அந்தப் பாதையில் அதற்கு மேல் செல்ல வழி இல்லாததால் திரும்பி வந்துள்ளார். அவரை பாலசுப்பிரமணியம் மற்றும் அக்கம்பக்கத்தினர் மடக்கிப் பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள செம்மண் குழிமேடு பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காஞ்சிக்கோயில் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் இது போல் வேறு எங்காவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.