Public road blockade demanding cleaning of Manimuttar

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். கோவிலையொட்டி மணிமுத்தாறு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. 'காசியை விட வீசம் பெருசு, விருத்தகாசி' என்று போற்றப்படுவது விருத்தகிரீஸ்வரர் கோவில்.

Advertisment

அதாவது 'காசியில் மூழ்கினால் கிடைக்கும் புண்ணியத்தை விட, மணிமுத்தாறில் மூழ்கி விருத்தகிரீஸ்வரரை வணங்கினால் வீசம் புண்ணியம் அதிகம் கிடைக்கும்' என்பது ஐதீகம். இங்கு மாசிமகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மாசிமகத்தன்று 26-ஆம் தேதி மணிமுத்தாறு நதிக்கரையில் இறந்துபோன முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மணிமுத்தாறு ஆற்றில் கழிவுநீர், மருத்துவக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவைதேங்கி நிற்பதால் பொதுமக்கள் திதி கொடுக்க இயலாது என்றும், ஆற்றினை சுத்தம் செய்யக் கோரியும்நகராட்சி அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஆற்றினை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், 22.02.2021 அன்றுகடைவீதி நான்குமுனைச் சந்திப்பில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

Public road blockade demanding cleaning of Manimuttar

சாலை மறியலில் ஈடுபட்டதால் பாலக்கரை, பேருந்து நிலையம், போஸ்ட் ஆஃபீஸ், தென் கோட்டை வீதி, கிழக்கு வீதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.தகவலறிந்து சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், நகராட்சி ஆணையர் வருகிற வரை சாலை மறியலைக் கைவிட மாட்டோம் என்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை நான்கு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. பின்னர் ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கான முயற்சி எடுப்பதற்கு கண்டிப்பாக வழிவகை செய்யப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில், சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.