உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனே அமைத்திட கோரி தொடர் போராட்டங்கள் நடத்த தமிழ்த்தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி உரிமை மீட்புக்குழு, நாம் தமிழர்கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்த்தேசிய பேரியக்கம், மனித நேய ஜனநாயக கட்சி, விவசாய சங்கங்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் இவ்வமைப்பில் உள்ளனர்.
இவ்வமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்காத நடுவண் அரசினை கண்டித்து நடுவண் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது, இந்திய அரசுக்கு வரி செலுத்துவதை புறக்கணிப்பது, இந்திய அரசு அலுவலகங்களை தமிழ்நாடு புதுச்சேரியிலிருந்து வெளியேற்றுவது, தமிழர் விரோத சுங்கச்சாவடிகளை இழத்து மூடுவது உள்ளிட்ட செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி புதுச்சேரியில் அமைந்துள்ள இந்திய வருமான வரித்துறை அலுவலகத்தினை தமிழ்த்தேசிய அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர்கட்சி கொள்கை விளக்கமாநில பாசறை செயலாளர் வெ.கார்த்திகேயன், தமிழ்த்தேசிய பேரியக்கம் செயலாளர் இரா.வேல்சாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளார் சி.ஹீதர் தமிழ் தமிழர் இயக்கம் பிரதாப்சந்திரன் உள்பட முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் திராவிடர் விடுதலைக்கழகம் தலைமையில் தமிழர்களம் உட்பட சமூக சனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்களும் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.