Skip to main content

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப்பள்ளி ஆசியர்கள் சம்பளம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
salary

 

தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

 

நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்"  தனியார் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்துவோர் மாணவ, மாணவிகளிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் சட்ட விதிகளுக்கு விரோதமானது. பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கல்வி கடன் பெற்று படித்து வேலையில் சேர்ந்துள்ளனர். இவர்கள் குறைவாக சம்பளம் பெறுவதால் கல்வி கடனை செலுத்த முடியவில்லை.

 

ஆசிரியர் தொழில் முக்கியமானது. இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டமைக்கின்றனர். பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிக குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் கல்வி கடன் செலுத்த கூட போதுமானதாக இல்லாததால் பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்கின்றனர். எனவே பிஎட், பிஇ, எம்இ முடித்து தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்..

 

இந்த மனுவை நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது "மனுதாரரின் கோரிக்கையை போலவே சம ஊதியம் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதிதாகத் திறக்கப்பட்ட அரசுப் பள்ளி கட்டடத்தில் விரிசல்கள்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Repairing the cracks in the new classroom building is in progress

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.264.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி வளாகம் போன்றவற்றைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைவினாயகர்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்த போது கட்டடத்தின் தரைதளம் மற்றும் சுவர்கள் உடைப்பு, விரிசல் இருப்பதைபபார்த்து பொதுப்பணித்துறை பொறியாளரிடம், இதெல்லாம் என்ன இப்படித்தான் வேலை செய்வீங்களா என்று கூறி உடனே சரி செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றனர். அதன் பிறகு அவசர அவசரமாக உடைப்புகளைச் சரி செய்யும்விதமாக ஆங்காங்கே சிமெண்ட் பூசியும், வெடிப்புகளில் பட்டியும் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அந்த கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். முதலமைச்சர் திறந்து வைத்த போது அந்தப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதிய மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.

முதலமைச்சர் திறந்து வைத்த பிறகும் பள்ளி வகுப்பறைக் கட்டடத்தில் ஏற்பட்டிருந்த உடைப்புகளுக்குப் பஞ்சர் ஒட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.