chennai high court

தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நிலுவை உதவித்தொகையை வழங்கக் கோரிய மனுவைப் பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டு முடியும் நேரத்தில், இத்தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில், கடந்த 2017- ம் ஆண்டு முதல்2019-ம் ஆண்டு வரை பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக கல்வி நிறுவனங்களுக்கு வழங்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத் தலைவர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு,நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏராளமான கல்லூரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த ஜூன் மாதமே அரசுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

Advertisment

இதையடுத்து, மனுதாரர் சங்கம் அளித்த மனுவைப் பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.