திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பக்தர்கள் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த 26ம் தேதி இந்த திருவிழா கணபதி ஹோமம் மற்றும் கொலுபூஜையுடன் துவங்கியது. இவ்விழாவில் குடகு நாட்டில் இருந்து அம்மனை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது.
பூஜைகள் முடிந்த பின் கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து பக்தர்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினார். இதன் பின் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கியும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.