Skip to main content

சென்னை வருகை தந்த குடியரசுத் தலைவர்; புத்தகங்கள் வழங்கி வரவேற்பு 

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன. இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் சிங்காரா விமானப்படைத் தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு மசினகுடி வந்தடைந்தார். அப்போது தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்தார். அதன் பிறகு தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வருகை தந்துள்ளார்.

 

இந்நிலையில், சென்னை வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று (5.8.2023) மாலை சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து  கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார். இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ‘திராவிட மாடல்’ என்ற புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவரை வரவேற்றார். இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவைத் துணைத் தலைவர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் எனப் பலர்  உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்