Skip to main content

“234 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க தயாராக உள்ளது..” - பிரேமலதா விஜயகாந்த்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Premalatha vijayakanth press meet at theni


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலர் திருமண விழாவில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.

 

இந்தத் திருமண விழாவிற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வருகிற சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிமிடம் வரையில், நாங்கள் அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்கிறோம். வருகின்ற, ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அறிவிப்பார். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபட உள்ளோம். கிளைமேக்ஸில் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். 


ரஜினகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து கேட்டபோது, இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், அதன்பின்னர் ஏற்படும் பல சோதனைகள், வேதனைகள் இடர்பாடுகளைக் கடந்து சாதனை படைப்பது மிகுந்த கஷ்டமான காரியம். முதலில் அவர் கட்சி ஆரம்பித்து, பெயர், சின்னம் அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும். அதன்பின்னர், பேசுகிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் வெற்றி பெற்று, மக்கள் நலப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம். மக்களுக்கான கட்சி தே.மு.தி.க.

 

தே.மு.தி.க என்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சிதான். டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகளும் இறங்கி வரவேண்டும். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வைத்து, அரசியல் செய்யப்படுகிறது. 'நிவர்', 'புரவி' ஆகிய புயல் தாக்கத்தின்போது, தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும், குறையும் உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிர்ப்பலி ஏற்படவில்லை. மக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். உணவு வழங்கப்பட்டது என்பது ஆறுதலான விஷயம். அதே நேரத்தில் குறை என்று சொன்னால் போதுமான வடிகால் வசதி இல்லை. நீர்நிலைகள் தூர்வாரப்படாததால், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இதனைச் சரிசெய்யும் கடமை அரசுக்குத்தான் உள்ளது” என்று கூறினார். பேட்டியின்போது மாவட்ட, நகர, ஒன்றியப் பொருளாளர்கள் பலர், உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்