Skip to main content

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது” - துணை முதல்வர்

Published on 06/12/2024 | Edited on 06/12/2024
Precautionary measures have prevented loss  life says Deputy CM udhayanidhi
கோப்புப்படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரண தொகுப்புகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

பின்னர் 19.15 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 28 கட்டிடங்களைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, 19.21 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்ட உள்ள 13 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத் துறைகளில் சார்பில் சுமார் 38 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். 

அதன் பின்பு பேசி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் இன்று முதல்வர் தூய்மை பணியாளர்களுக்கான வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து  ராணிப்பேட்டை மாவட்டத்திலும் 239 தூய்மை பணியாளர்களுக்கு 700 பாதுகாப்பு உபகரணம் வழங்கியுள்ளோம். 7000 பேருக்கு ரூ.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம் வழங்கியுள்ளோம். துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக ராணிப்பேட்டைக்கு உங்கள் வாழ்த்துக்களை பெற வந்துள்ளேன்.

தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் ஃபெஞ்சல் புயல் காரணமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் என்னால் மகிழ்ச்சியாக கலந்துகொள்ள முடிகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிருக்கு அரணாகப் பாதுகாப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார். இம்மாவட்டத்தில் 700 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க உள்ளோம்.

3 1/2 ஆண்டில் 580 கோடி மகளிர் இலவச பயணம் மேற்கொண்டுள்ளார்கள். மகளிரின் வெற்றியே எங்கள் லட்சியம். எல்லோருக்கும் எல்லா என்பது தான் திராவிட மாடல். மக்களோடு மக்களாக கைகோர்த்து இருக்கும் அரசு தான் திராவிட மாடல் அரசு” என்று பேசினார்.

முன்னதாக ராணிப்பேட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்  பள்ளிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென சென்று மாணவிகளை சந்தித்தார்.  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா  கி.பி 7 ம் நூற்றாண்டின் பல்லவர்கால மகேந்திரவாடி குடை வரைக் கோவில் சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

சார்ந்த செய்திகள்