Skip to main content

“உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்” - எலானின் நடவடிக்கைக்கு பிரகாஷ் ராஜின் ரியாக்சன் 

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Prakash Raj reaction to elon musk twitter blue tick issue

 

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையைக் கொண்டு வந்தார்.

 

மேலும் மாத சந்தா ரூ.900 கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில சினிமா பிரபலங்களுக்கு ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதன்படி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசியலில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரின் கனக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. 

 

அந்த வகையில் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்ட நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாய் பாய் ப்ளூ டிக்... நீங்கள் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது பயணம், பேச்சு, பகிர்வு மக்களுடன் தொடர்ந்துகொண்டிருக்கும். உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்புக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Elon Musk shocked Trump at US Presidential Election

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில், வேட்பாளராக நிற்க போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

Elon Musk shocked Trump at US Presidential Election

அந்த வகையில் கடந்த 3ஆம் தேதியும், 5ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதே போல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும், தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியது.  

இந்த நிலையில், டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், வேட்பாளர்களில் எவருக்கும் நான் நிதியுதவி அளிக்கப்போவதில்லை’ எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் எனக் கூறப்படுகிறது. 

Next Story

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வழக்கு - அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
prakash raj, bobby simha case update

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.