
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கவனை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தைச்சுற்றி சுமார் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்கிராமத்திலுள்ள மின்பகிர்மான பெட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பழுதாகியது. மின்பகிர்மான பெட்டி பழுது ஆகியதால், விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி அடைந்த விவசாயிகள், தங்களது சொந்த செலவில் அப்பெட்டியைப் பழுது நீக்கம் செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் பழுது ஆகியதால், அப்பெட்டியை மாற்றி புதிய மின் பகிர்மான பெட்டி அமைத்துத் தர வேண்டும் என விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தில் அப்பகுதி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதி மக்கள்மின்சாரம் இல்லாமல், விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். அதையடுத்து அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும், விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)