Skip to main content

“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் ஓராண்டு நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

velmurugan

 

 

“ ஸ்டெர்லைட் வேதாந்தா, வேதகால பாஜக, இவர்களின் அடிப்பொடி அதிமுக இணைந்து, தூத்துக்குடியில் இனப்படுகொலை நிகழ்த்திய நாள் 22.05.2018. அன்று காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மொத்தம் 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதனை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்றார், அந்தக் காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இப்போது இந்நிகழ்வின் ஓராண்டு நிறைவுறும் நிலையில், அதன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் தடை விதித்திருக்கிறார்.
 

இந்தத் தடை துப்பாக்கிச் சூடு நடத்திய நாள் தொட்டே இருந்து வருகிறது. அந்நிகழ்வு தொடர்பாகப் பேசவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ, போராட்டம் நடத்தவோ ஓராண்டு காலமாகவே அனுமதியில்லை. அதல்லாமல், வழக்குப் போடப்பட்டு  ஆயிரக்கணக்கானோர் வதைக்கப்படுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோர் மேலும் வழக்குப் போடப்பட்டிருக்கும் கொடூரம் வேறு. இவை அனைத்தும் பாசிச-சனாதன பாஜகவின் கட்டளைப்படியே அரங்கேறியிருக்கிறது.
 

தூத்துக்குடியில் நடந்தது தமிழினப்படுகொலை என நாம் குறிப்பிடுவதற்குக் காரணமுண்டு. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே, “இந்தியாவின் போரைத்தான் நடத்தினேன்” என்றான். இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள். ஆக, இந்துத்துவ சனாதனம், தன்னைத் தக்கவைத்துக் கொள்ள, தேசத் தந்தை காந்தி தொடங்கி இன்று வரை பயங்கரவாதச் செயல்களைத்தான் செய்துவருகிறது; பாபர் பள்ளிவாசல் தகர்ப்பும் இதில் அடக்கமே; பாதிரியார் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் சேர்த்து காரோடு எரித்துக் கொன்றதுவும் இதில் சேர்த்தியே.
 

 

 

ஏற்கனவே மே 17 தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை தடை செய்ததன் தொடர்ச்சியாகத்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை நினைவேந்தலையும் தடை செய்திருக்கிறார்கள். இவ்விரு நிகழ்வுகளோடு, தமிழகத்தில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு அனுமதி கொடுத்திருப்பதையும், இதில் முதல்வர் பழனிசாமி, “மக்கள் கருத்துக் கேட்பே தேவையில்லை” என தமிழக சுற்றுச்சூழல் விதியினையே திருத்தி, பிரதமர் மோடி மற்றும் அவரது நண்பர் ஸ்டெர்லைட் அதிபருக்கு உதவியிருப்பதையும் சேர்த்து மக்கள் கவனத்தினின்றும் திசைதிருப்ப, தந்திரோபாயத்திலும் ஈடுபட்டார்கள்.
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுப் படுகொலை நினைவேந்தலுக்குத் தடை விதித்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டி தோழமைக் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!
 

 சனாதன பாஜக-அதிமுகவின் அரச பயங்கரவாதத்தை வேரறுப்போம், வாரீர் என அழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
"Justice has been received in the Supreme Court" - Vaiko

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

"Justice has been received in the Supreme Court" - Vaiko

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.