Political parties struggle against the incident of the youth

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பெருங்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மகன் கதிர்வேல்(18). இவர் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் விளையாடச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை அதேபகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கதிர்வேல் அணிந்திருந்த செருப்பு மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 30 அடி ஆழக் கிணற்றில் இருந்து கதிர்வேலை சடலமாக மீட்டனர். பின்னர் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கதிர்வேல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீயாகப் பரவியது. மேலும் கதிர்வேல் அதே பகுதியில் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சார்ந்த சிறுமியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கதிர்வேலின் சாவுக்கு சிறுமியின் தந்தை தான் காரணம் எனக் கருதிய கதிர்வேலின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆவேசமாகச் சிறுமியின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் பயந்து போன சிறுமியின் பெற்றோர்கள் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டனர். ஆனாலும் கதிர்வேல் தரப்பினர் சிறுமியின் வீட்டைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

Advertisment

Political parties struggle against the incident of the youth

இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது சிறுமியின் தந்தை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னை தாக்க வந்தவர்களை நோக்கி கத்தியை வீசி உள்ளார். இதில் கதிர்வேல் தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் 24, வல்லரசு 24. ஆகிய இரண்டு வாலிபர்களின் தலையில் காயம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ஏ.டி.எஸ்.பி குமார், அரக்கோணம் டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் பெருங்காஞ்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கதிர்வேலின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் சிறுமியின் தந்தையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கதிர்வேலின் உறவினர்கள் சோளிங்கர் - வாலாஜா செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் போது விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், இந்தியக் குடியரசு கட்சி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டு மறியல் ஈடுபட்டு உடனே கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஏ.டி.எஸ்.பி குமார் மற்றும் ராணிப்பேட்டை திருமால் அரக்கோணம் டி.எஸ்.பி.வெங்கடேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment

அப்போது கதிர்வேலின் சாவுக்குக் காரணமான சிறுமியின் தந்தையை உடனடியாக கைது செய்தால் தான் மறியலைக் கைவிடுவோம் என போலீசாரிிடம் தெரிவித்துத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் பிரேதப் பரிசோதனையில்தான் கதிர்வேல் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். எனவே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டது.