Skip to main content

சிறையில் இருந்த கைதியை மூன்று ஆண்டுகளாக வெளியில் தேடிய போலீசார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 The police searched for the prisoner outside the jail for three years

திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிறையில் இருக்கும் நிலையில், அவரை மற்றொரு வழக்கில் போலீசார் மூன்று ஆண்டுகளாக வெளியில் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்து ஆறு லட்சம் ரூபாய் திருடிய வழக்கு ஒன்றில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். அதே நேரத்தில் வேறொரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷை திருமுல்லைவாயில் போலீசார் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து புழல் சிறையில் குற்றவாளி விக்னேஷ் அடைக்கப்பட்டு இருந்தார். ஆனால் இந்த தகவல் தெரியாத அரும்பாக்கம் போலீசார் பல இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக விக்னேஷை தேடி வந்தனர். அண்மையில் புழல் சிறையில் உள்ள கைதிகளின் கைரேகைகளை கணினியில் பதிவேற்றம் செய்து புதுப்பித்தது சிறைத்துறை. அந்த கைரேகையில் விக்னேஷின் கைரேகை இருப்பது கண்ட அரும்பாக்கம் போலீசார் அதிர்ந்தனர். அப்பொழுதுதான் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் இளைஞர் விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கே தெரியவந்தது. உடனே புழல் சிறைக்கு சென்ற போலீசார் விக்னேஷை மீண்டும் திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.