Police protection for the Armstrong family

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

அதே சமயம் பெரம்பூரில் உள்ள அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்தி அவருடைய குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்து வரும் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.