Police notice to TTF Vasan

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். அவர் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்தனர். சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்டார்.அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டிடிஎஃப் வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்கவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். மேலும் தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட நற்பணிகளை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து டிடிஎஃப் வாசன் கூறுகையில், “நான் காரை வேகமாக ஓட்டவில்லை. என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறேன்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்டு அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி 10 நாட்களுக்க்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, முதல் நாளான இன்று காவல் நிலையத்திற்கு நேரில் வந்து டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டிடிஎஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.