Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்...மனிதநேயத்தோடு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர்!!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி தமிழகத்தையே புரட்டிப்போட்ட கஜா புயலின் தாக்கம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்ட மக்களை இன்னும் எழும்பவிடவில்லை. விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அரசு பள்ளிகள், அலுவலகங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அனைவரையும் நடைபிணமாக வாழ வைத்துவிட்டது கஜா புயல்.

police helps mentally ill woman


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பேப்பர் மில் ரோடு கடைவீதியில் டீ கடை நடத்தி வந்த கணவரை இழந்த பரமநகரைச் சேர்ந்த சாவித்திரிக்கு 4 மகள்கள். 3 மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டாலும் ஒரு மகளை கரை ஏற்ற வேண்டும் என்று டீ கடையை தொடர்ந்து நடத்தினார். ஆனால் கஜா புயல் கடையையும், வீட்டையும் உடைத்து தூக்கி எரிந்துவிட்டது. உடமைகள் அத்தனையும் தண்ணீரிலும், காற்றிலும் காணாமல் போனது. 

இதை நினைத்து நினைத்து சாவித்திரி அழ.. தாயின் கண்ணீரை துடைக்க பள்ளிப் படிப்பை முடித்த மகள் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றார். ஆனால் தாயால் இதனை எல்லாம் சீரணிக்க முடியவில்லை. பலவற்றையும் நினைத்து குழப்பத்தில் தானாக பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டது. 

பகலில் ஓரிடத்தில் இருந்தாலும் இரவில் கிராமத்தை சுற்றி தன்னிலை குறித்து வீடு வீடாக பேசினார். கண்ணில் கண்டதை எடுத்து உடைத்தார். இப்படித்தான் இரவு ரோந்து சென்ற வடகாடு இன்ஸ்பெக்டர் பரத் ஸ்ரீனிவாஸ் கண்ணில் பட அவரைப் பற்றி விசாரிக்க கஜா புயலில் அனைத்தையும் இழந்து மனிநிலையும் பாதிக்கப்பட்டதை சொன்னார்கள்.

நேற்று இவரை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தவர், இப்படி பாதிக்கப்பட்டவரை உறவினர்கள் எப்படி வைத்து பாதுகாக்க முடியும் என்று புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்திடம் இது பற்றி பேசி அவரை சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மருத்தவர் கார்த்திக் தெய்வநாயம் விடுப்பில் இருந்தாலும் சக மருத்துவர்களிடம் பேசி சாவித்திரியை சிகிச்சைக்கு அனுமதிக்க கேட்டுக் கொண்டார். அதன் பிறகு உறவினர் வீட்டில் இருந்த சாவித்திரியை கொத்தமங்கலம் இளைஞர் முத்துவின் உதவியுடன் வாடகை கார் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இது குறித்து உறவினர்கள் கூறும் போது "கணவரும் இல்லை. கஜா புயல் கடை, வீடு அத்தனையும் கொண்டு போய் விட்டது. ஒரு மகள் மட்டும் இருக்கிறாள். அவளை கரைசேர்க்க முடியுமா என்று நினைத்தே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார். புயலுக்கு பிறகு குடியிருக்க ஒரு கொட்டகை கூட கட்ட முடியவில்லை. அதனால் உறவினர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார். இரவில் எங்காவது சென்றுவிடுவார். அப்படி தான் போலீசார் பிடித்து வந்து ஒப்படைத்தார்கள். இப்ப சிகிச்சைக்கும் அனுப்புகிறார்கள்.


அதனால் அரசாங்கம் சாவித்திரிக்கு ஒரு வீடு கட்டிக் கொடுப்பதுடன் மறுபடியும் கடை நடத்த கடன் உதவியும் செய்து கொடுத்தால் சிகிச்சைக்கு பிறகு பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றனர். கஜா புயல் உடமைகளை அழித்து மனநிலையும் பாதிக்க செய்துவிட்டது. அரசாங்கம் நினைத்தால் அந்த பெண்ணை நலமாக்கி வாழ வைக்கலாம்.
            
    
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கு; போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
M.R. Vijayabaskar case; Police inspector arrested

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார்.  மேலும் இது தொடர்பாக  மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக  இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர்.  மேலும் இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வந்தனர். 

M.R. Vijayabaskar case; Police inspector arrested

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். அதோடு சார்பதிவாளரை மிரட்டிய வழக்கில் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

M.R. Vijayabaskar case; Police inspector arrested

இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில் உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ்  சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான நிலத்தின் ஆவணங்கள் காணவில்லை என்று சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் பத்திரங்கள் கண்டறிய கண்டறிய முடியவில்லை எனக் காவலர் பிரித்விராஜ் போலியான சான்றிதழை அளித்துள்ளார், இதன் அடிப்படையிலே எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பினர் நிலத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் சார் பதிவாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் போலியான ஆவணங்களை கொண்டு தன்னை மிரட்டி நிலத்தை பதிவு செய்தனர்’ என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

Next Story

காவல் ஆய்வாளர் மீது தொடர் புகார்; பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Transferred to  armed forces after   complaints against the police inspector

சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வேலூர் மாவட்ட காவல்துறையில் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆய்வாளர் ராஜா சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகார் கொடுக்க வருபவர்களையே தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் அதிக குற்றச்செயல்கள் நடப்பதாகவும், அதே பகுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரிந்தும் ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜாவை உயர் அதிகாரிகள் இரண்டு மூன்று முறை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனாலும் காவல் ஆய்வாளர் ராஜா தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜாவை வேலூர் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.