Police file case  school students

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை ஒட்டி உள்ளது சந்தைப்பேட்டை பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன்திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் மற்றும்அவரது நண்பர்கள் 7 பேரும் தலைமுடியை அதிகமாக வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் காலை பள்ளிக்கு வந்தபோது, அதனைக் கண்ட ஆசிரியர்கள் அவர்கள் 8 பேரையும் தலைமுடியை வெட்டிக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

Advertisment

இதற்காக இந்த மாணவர்கள் பள்ளியிலிருந்து பஸ் நிலையம் அருகில் உள்ள சலூன் கடைக்கு முடி வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மற்ற 6 பேர்,அப்பகுதியில் கும்பலாக நின்றுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு இரு தரப்பு மாணவர்களுக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி அங்கிருந்த கட்டை உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு 6 மாணவர்கள், 8 மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனால் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்தத் தகவல் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்தவர்களை மட்டும் போலீசார் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதுகுறித்து மாணவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்ததிருக்கிறது, கோவிலூர் போலீசார்.