Skip to main content

உக்ரைனில் தமிழக மாணவர்கள் சித்திரவதை; போலீஸை நாடிய பெற்றோர்!

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

police Complaint against those who cheated by buying tickets medical college

 

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயியான இவர் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றியும் வருகிறார். இவருடைய மகன் கவியரசு எம்பிபிஎஸ் படிப்பிற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சாமிநாதன் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும்போது அறிமுகமான ஈரோடு எல்லப்பாளையம் கிழக்கு வீதியைச் சேர்ந்த ஆவினில் தற்காலிகமாக ஊழியராக வேலை பார்க்கும் தனலட்சுமி(52) என்பவரிடம் மகனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு தனலட்சுமி தனது மகன் ஜோகித் ஆதித்யா (24) உக்ரைன் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வருவதாகவும் அவர் மூலமாக அந்த நாட்டில் மருத்துவ படிப்பில் உங்கள் மகனை சேர்த்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதனால் சாமிநாதன் மகன் கவியரசு மற்றும் அவருடைய நண்பர் நவீன் வர்ஷன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வதாக தனலட்சுமியிடம் கூறினார்.

 

இதையடுத்து, தனலட்சுமி அவருடைய கணவரான ஜேசிபி வாகன உரிமையாளர் வேலுச்சாமி(52), அவரது மகன் ஜோகித் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இருவரிடம் சேர்ந்து ரூ 14 லட்சத்து 96 ஆயிரம் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து கவியரசு, நவீன் வர்ஷன் ஆகியோரை விமானம் மூலம் உக்ரைன் நாட்டிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பி வைத்தனர். அங்கு தனலட்சுமி  மகன் ஜோகித் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடாமல் இருவரையும் தனி அறையில் அடைத்து வைத்து, அந்நாட்டிலுள்ள தனது நண்பர்கள் மூலமாக கவியரசையும், நவீன் வர்ஷனையும் மிரட்டி வந்துள்ளார். 

 

மேலும் இருவரின் பெற்றோர்களிடம் ஜோகித் இரண்டாவது பருவத்திற்கு கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டும். பணத்தை அனுப்பி வைக்குமாறு போனில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாமிநாதன் மற்றும் நவீன் வர்ஷனின் பெற்றோர் உக்ரைன் நாட்டில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த வேறு மாணவர்கள் மூலமாக விசாரித்ததில் தங்களது மகன்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை என்பதும், மாணவர்கள் விசாவில் அழைத்து வராமல் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

 

இதனைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள் சிலர் கவியரசையும், நவீன் வர்ஷனையும் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் சாமிநாதன் மற்றும் நவீன் வர்ஷன் பெற்றோர் தனலட்சுமி மற்றும் வேலுச்சாமியிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சாமிநாதன் இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனலட்சுமி, அவரது மகன் ஜோகித், கணவர் வேலுச்சாமி ஆகியோர் பணத்தைப் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

 

இதையடுத்து அவர்கள் மூன்று பேர் மீதும் கூட்டுச் சதி, ஏமாற்றுதல், பணத்தைப் பெற்று மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனலட்சுமி, வேலுச்சாமியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது மகன் ஜோகித்தை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் இதேபோன்று வேறு யாரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்