நாமக்கல் அருகே, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு சமூகத்தினர் கோயில் நுழைவுப் போராட்டத்தை அறிவித்து இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே, கடந்த சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இறுதி தீர்ப்பு வரும் வரை இரு சமூகத்தினரும் கோயில் வளாகத்திற்குள் நுழையக் கூடாது என இடைக்கால உத்தரவும், இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோட்டாட்சியர் பிரபாகரன், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் ஏப். 17 ஆம் தேதி வரை யாரும் நுழையக்கூடாது என்றும், பூஜைகள் செய்ய பூசாரிகள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோட்டாட்சியர் தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பான நிலையில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் திடீரென்று, திங்கள்கிழமை (ஏப். 3 ஆம் தேதி) கோயிலுக்குள் நுழையும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
இதையடுத்து நாமக்கல் ஏடிஎஸ்பி மணிமாறன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர். ஆனால், கோயில் நுழைவுப் போராட்டம் அறிவித்து இருந்த சமூகத்தினர் திடீரென்று போராட்டத்தைக் கைவிட்டனர். எனினும், சம்பவத்தன்று நாள் முழுவதும் அந்தப் பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. இரு சமூகத்தினர் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதால் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.