Skip to main content

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்; போலீசார் தீவிர விசாரணை

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Police are actively investigating on incident  on private TV journalist

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் நேற்று இரவு (24-01-24) செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர். 

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Police are actively investigating on incident  on private TV journalist

இதனிடையே, கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு செய்தியாளர் நேசபிரபு புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேசபிரபுவை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டி.எஸ்.பி. முதல் பைனான்சியர் வரை... காதலில் வீழ்த்திய கல்யாண ராணி!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
woman who has cheated many people in love, from dsp to financiers

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இதில் அந்த இளைஞரின் வாழ்க்கை நலன் கருதி அவரது பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. 35 வயதான இவர்.. தாராபுரம் - உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராம்குமாருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும்.. திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக வரண் தேடி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அம்பி டேட் தி தமிழ் வே என்ற செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா என்பவருடன் ராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலியைத் தொடர்ந்து. இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர்.  அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு ராம்குமாருக்கும் திருமண வரன் அமையாமல் இருந்ததால் சந்தியாவை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதனிடையே, இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராம்குமாரிடம் சந்தியா வற்புறுத்தி உள்ளார்.

இந்த நிர்பந்தத்தின் காரணமாக தமிழ்ச்செல்வி தலைமையில் ராம்குமாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை ராம்குமாரின் பெற்றோரும் ஏற்றுக்கொண்ட நிலையில் சந்தியாவுக்கு 12 பவுன் நகைகள், புடவைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இதனிடையே, இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கடந்த நிலையில் சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சந்தியா தனக்கு 30 வயது எனக் கூறிய நிலையில் அவர் கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்குமார், சந்தியாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, ராம்குமார் தரப்பிற்கும் சந்தியாவிற்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், கோபமடைந்த சந்தியா, ராம்குமாரையும் அவரது குடும்பத்தையும் மிரட்டி உள்ளார்.

இதனால் உஷாரான ராம்குமார், தனது மனைவி சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா போலீஸ் விசாரணையின் போதே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியா குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. அந்த நேரத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தியா அவரை விட்டு பிரிந்தார். காலப்போக்கில் தனிமையில் இருந்த சந்தியா பணத்திற்காக வேறு திசையில் பயணிக்க தொடங்கினார். திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்தியாவின் திருமண பட்டியலில் டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் எனச் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் எனச் சந்தியாவின் பட்டியல் நீண்டு கொண்டே போனது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த சந்தியாவை கைது செய்த போலீசார் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏராளமான தொழிலதிபர்கள் சந்தியாவை திருமணம் செய்து நகை பணத்தை இழந்து இருப்பதும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணைக்குப் பிறகு சந்தியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ஆன்லைன் செயலி மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

அந்நியன் டூ அம்பி; திருமணத்திற்குப் பிறகு மனைவிக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
husband beats his wife for dowry after marriage

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு 26 வயதாகிறது. திவ்யாவுக்கும் கோவையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கிஷோருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்தபோது, கிஷோர் தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்வதாக கூறியிருக்கிறார். 

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக.. திவ்யாவின் பெற்றோர் சார்பில் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் திருமண செலவிற்கான பணம் ஆகியவற்றை கிஷோர் குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, திருமண நாளில் மண்டப கட்டணத்தை கொடுப்பதற்காக திவ்யாவின் நகையை விற்று அந்த பணத்தை கொடுத்துள்ளனர். இப்படி பல்வேறு இன்னல்களுக்கு பிறகு திவ்யாவை அவரது பெற்றோர் கரை சேர்த்துவிட்டனர். 

இந்த இளம்பெண் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்க நினைத்த சமயத்தில், இவருக்கு ஆரம்பமே பேரிடியாக அமைந்தது. ஆரம்பத்தில் நல்லவர் போல் வேடம் போட்ட கிஷோரின் முகத்திரை  திருமணமான சில நாட்களிலேயே கிழிய தொடங்கியது.   கிஷோர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். ஒருகட்டத்தில், மது போதைக்கு அடிமையான கிஷோர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். தள்ளாடிய போதையில் வீட்டிற்கு வரும் கிஷோர் தன் மனைவி திவ்யாவுடன் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சில சமயங்களில் மோதல் முற்றி, திவ்யாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இதனிடையே, கிஷோர் தனக்கு திருமணமான ஒருசில மாதங்களிலேயே திவ்யா வீட்டில் வரதட்சணையாக கொடுத்த நகைகளை விற்று உல்லாசமாக ஊர் சுற்றி வந்திருக்கிறார். மேலும், திவ்யாவின் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தார் திவ்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாத திவ்யா தனது பெற்றோரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனிடையே, நாளுக்கு நாள் கிஷோர் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக திவ்யாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

தான் ஒரு அரசு வங்கி அதிகாரி போல் நாடகம் ஆடிய கிஷோர்குமார் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்பாவி பொதுமக்களிடம் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருகிறேன், அரசு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி ஏராளமான இளைஞர்களிடம் இருந்து பண மோசடி செய்திருக்கிறார். அதே போல், போலி பத்திரங்களை கொடுத்து கடன் வாங்கி அந்த கடனையும் கட்டாமல் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. ஒருகட்டத்தில்,  திவ்யாவின் அப்பாவிடமே கிஷோர் தனது வேலையை காட்டியிருக்கிறார். அவரிடம் போலியான இரண்டு நில பத்திரத்தை கொடுத்து கிஷோர் 10 லட்ச ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். நாளடைவில் இதையெல்லாம் தெரிந்துகொண்ட திவ்யா தான் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர்.. தனது மனைவி என்றும் பாராமல் திவ்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த திவ்யா திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட திவ்யா இச்சம்பவம் குறித்து  தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திவ்யாவின் கணவர் கிஷோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட சமூக நல அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திவ்யா மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம்  மனு அளித்தார். இதன் அடிப்படையில் மோசடி ஆசாமி கிஷோர் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த மோசடி மன்னன் கிஷோர் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து.. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பிறகு கிஷோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.