Skip to main content

பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் அதிரடி சோதனை!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Police action in Periyar University

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமியின் அலுவலகம், கணினி அறிவியல் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று செல்கிறார். அங்கு துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முறைகேடு புகாரில் சிக்கியவர்களை ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், திமுக மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்